சென்னை: 18வது நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கெனல் சாலை பகுதியில் தேர்தல் தணிக்கை குழு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை மடக்கி தணிக்கை குழு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில், அப்போது உரிய ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்துச் சென்ற 24 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அம்பத்தூர் வட்டாட்சியர் தலைமையில் அம்பத்தூர் மண்டலம் 7 அதிகாரிகள் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: தீவிரமடையும் பறக்கும் படை சோதனை.. ரூ.5.37 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருட்கள் பறிமுதல்!