திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் ரோடு, நல்லூர் சர்ச் அருகே நேற்று (வியாழக்கிழமை) 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சேலையில் கட்டுக்கட்டாக பணத்தை சுற்றி வைத்துக் கொண்டு, அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதியினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில், அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த மாநில வரி அலுவலர் குணசேகர், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு மணிமேகலை, சரவணக்குமார் உள்ளிட்ட போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் அவரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஆவணம் ஏதுமின்றி 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த பெண் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அப்பணம், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் முன்னிலையில், உதவி ஆணையாளர் (கணக்கு பொறுப்பு) தங்கவேல் ராஜன் கருவூலத்திற்கு அனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் துறையூர், திருமனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மணிமேகலை (36) என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன் பண்ணாரி அம்மன் கோயிலுக்குச் சென்று பிச்சை எடுத்த பணமே, தான் வைத்திருந்த பணம் என அதிகாரிகளிடம் மணிமேகலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மணிமேகலை போதையில் இருந்த காரணத்தால், அவரை ஆலங்காட்டில் உள்ள 'நோ ஃபுட் நோ வேஸ்ட்' என்ற காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணம், மணிமேகலை கூறுவதைப் போல பிச்சை எடுத்து சேர்த்த பணம் தானா? அல்லது வேறு ஏதேனும் வழியில் அவருக்கு கிடைத்த பணமா? போன்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நல்லூர் காவல் நிலையத்துக்கு ரூ.1.50 லட்சம் பணம் தொலைந்ததாக புகார் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, பறிமுதல் செய்யப்பட்ட பணம் அந்த பணமாக இருக்குமோ? என்ற சந்தேகம் தற்போது போலீசாருக்கு எழுந்துள்ளது. மணிமேகலை போதையில் இருந்த காரணத்தால், அவரிடம் முழு விசாரணை மேற்கொள்ள முடியாததாகவும், விசாரணைக்கு பின்னர் பணம் குறித்த முழு விவரமும் தெரியவரும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024; 1,085 வேட்பு மனுக்கள் ஏற்பு - எத்தனை நிராகரிப்பு? முழு விவரம்! - Nominations Accept And Reject In TN