சேலம்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அதிகாரிகளுக்கு அவ்வப்போது தகவல் கிடைக்கின்றது.
அந்த ரகசியத் தகவல் கிடைப்பதாகவும், அடிப்படையில் சோதனை மேற்கொள்ளும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சோதனைச் சாவடி, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டுக்கட்டாக பணத்தைப் பறிமுதல் செய்வதாகவும் கூறப்படுகிறது.
ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்: நேற்று (செவ்வாய்க்கிழமை) சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள லத்துவாடி வாகன சோதனைச் சாவடி மையத்தில் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அதிகாரி கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஈசர் மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.4.19 லட்சம் சிக்கியுள்ளது. மேலும், விசாரணையில் ஆத்தூர் தாண்டவராயபுரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் செல்வகுமார், உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. அதனையடுத்து, அதிகாரிகள் அப்பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல, சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே உள்ள கடலூர் நெடுஞ்சாலையில் தேர்தல் கூடுதல் பறக்கும் படை அதிகாரி கணேசன் தலைமையிலான குழுவினர் நேற்று காலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் (ஜூபிடர் மொபட்) வந்த நபரிடம் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவரிடம் ரூ.16.86 லட்சம் இருப்பது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் வாழப்பாடி ஏடிஎஸ் டிப்போவைச் சேர்ந்த அமமுகவின், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சண்முகம் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த நபர் ஆத்தூர் அருகே நடத்தும் பெட்ரோல் பங்கில் விற்ற பணத்தை வங்கியில் செலுத்த எடுத்துச் சென்றாக தெரிவித்துள்ளார். ஆனால் முறையான ஆவணம் இல்லாத காரணத்தால், அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சேலம் வடக்கு தொகுதி கூடுதல் பறக்கும் படை அதிகாரி ஜெயந்தி தலைமையிலான குழுவினர், நேற்று செவ்வாய் பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகங்கள் எதிரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த டிஸ்கவரி பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ.4.70 லட்சம் இருந்தது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பைக் ஓட்டி வந்தவர் சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தைச் சேர்ந்த சையத் சுல்தான் இப்ராஹிம் என்பதும், அவர் அதே பகுதியில் ஆப்டிகல்ஸ் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது. ஆனால் அவரிடமும் எடுத்து வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அந்த பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மூலப்புதூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரி ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடம்பூர் பாரதிபுரத்தைச் சேர்ந்த சொக்கலப்பன் என்ற நபர் முறையான ஆவணமின்றி காரில் எடுத்து வந்த ரூ.76 ஆயிரத்து 500யை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிமுக செயலாளர் வீட்டில் பணம் பறிமுதல்: சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுக்காவில் தாரமங்கலம் நகராட்சி உள்ளது. இங்கு அதிமுக நகரச் செயலாளராகவும், நகர் மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார் பாலசுப்பிரமணியம். இவர் தனது வீட்டை ஒட்டியே நகைக் கடைகள் நடத்தி வருகிறார். தற்போது நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்குவதற்காகக் கோடிக் கணக்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில், வருமான வரித்துறை உதவி ஆணையர் பிரதீப் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்றிரவு சோதனையைத் துவங்கினர். அப்போது, இரண்டு வீடுகள், இரண்டு நகைக் கடைகள் மற்றும் அவரது மகன் வீடுகளிலும் சோதனை நடத்தினர். விடிய விடிய நடந்த சோதனையில், கணக்கில் வராத தங்க நகைகள், பணம் என சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கணக்கில் வராத நகை மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து விசாரணை நடத்துவதற்காக அதிமுக நகர செயலாளர் மகன் பாஸ்கரையும் அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே நகர செயலாளர் வீட்டில் சோதனை நடப்பது குறித்த தகவலறிந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் பாலசுப்பிரமணியம் வீட்டுக்கு அருகே கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நகர செயலாளர் பாலசுப்பிரமணியத்திடம் கேட்டபோது, "எவ்வளவு எடுத்துச் சென்றார்கள் என்பது தெரியவில்லை" எனத் தெரிவித்தார். மேலும், வருமான வரித்துறை உதவி ஆணையர் பிரதீப் கூறும்போது, "புகாரின் பேரில் சோதனை செய்து கணக்கில் வராத பணம், நகைகளைப் பறிமுதல் செய்து எடுத்துச் செல்கிறோம். விசாரணை முடிவில் தான் இதன் மொத்த மதிப்பு என்ன என்பது தெரிய வரும்" என்று தெரிவித்தார்.