கோயம்புத்தூர்: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும்19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
அதன்படி, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர், தேர்தல் கண்காணிப்பு சிறப்பு படை அதிகாரிகள், பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று (திங்கட்கிழமை) கோவை, சிறுவாணி சாலை தெலுங்குபாளையம் அருகே தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, அவ்வழியாக வந்த வாகனங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஏடிஎம்-மில் பணம் நிரப்பும் வாகனம் ஒன்று சென்றுள்ளது. அதனை பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், வாகனம் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வாகனத்தை துரத்திச் சென்று பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மடக்கிப் பிடித்துள்ளனர். மேலும், இது குறித்து, வட்டாட்சியர் மற்றும் பேரூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர், அந்த வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் ரூ.3.5 கோடி பணம் உரிய ஆவணங்களுடன் இருந்துள்ளது. மேலும், இந்த பணம் பேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக எடுத்து வந்தது தெரியவந்தது.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வேறு வாகனத்தை நிறுத்த முற்படுவதாக நினைத்து, ஓட்டுநர் வாகனத்தை நிற்காமல் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, உரிய ஆவணங்களுடன் பணம் இருந்ததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்யாமல் வாகனத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தென்காசி அருகே நிகழ்ந்த விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய அரசு பேருந்து... நடத்துநர் பலி; 11 பேர் படுகாயம்! - TENKASI BUS ACCIDENT