சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் 3வது நாள் அமர்வு இன்று (பிப்.14) நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். அதற்காக பல்வேறு அரசியல் திமுக ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வ பெருந்தகை பேசுகையில், "முதலமைச்சர் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை காங்கிரஸ் பேரியக்கம் வரவேற்கிறது, ஆதரிக்கிறது. தென்னிந்தியாவிற்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வழிகாட்டும் ஒரு தீர்மானமாக இது பார்க்கப்படுகிறது.
நம்முடைய நாடு எங்கு செல்கிறது என்பதை எல்லோரும் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். பாரம்பரியமிக்க நமது சட்டப்பேரவையில், நம்முடைய தலைவர்கள் யாரும் இதைபோன்ற திட்டங்களை தீட்டவில்லை. நாட்டை தெற்கு, வடக்கு என்று பிரித்து பார்க்கவில்லை. வாஜ்பாய் பிரமராக இருக்கும் காலத்தில் இதே போன்று மறு சீரமைப்பு என்கிற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர் ஒருவர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம். மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 48.52 சதவீதம் மக்கள் தொகை உள்ளது. இந்த மாநிலங்களை ஒரு நாடாகவும், தென் மாநிலங்களை ஒரு நாடாகவும் கருத முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகு வாஜ்பாய் இந்த திட்டத்தையே கைவிட்டார்.
ஏற்றத்தாழ்வு பார்க்க கூடாது, எல்லா மாநிலங்களையும் சரிசமமாக பார்க்க வேண்டும். நிதி ஆயோக் என்கிற அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பிடம் நிதியும் இல்லை, நீதியும் இல்லை. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தமிழகம் மற்றும் கேரளத்தின் ஆயுளை இரண்டு ஆண்டுகள் குறைக்க வேண்டும் என்றும், உத்தர பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் மாநிலத்தின் ஆயுளை இரண்டு ஆண்டுகள் அதிகரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
இது எவ்வளவு பெரிய பாரபட்சம். வருங்கால சமுதாயத்திற்கும், தென்னிந்தியாவிற்கும் மிகப் பெரிய ஆபத்து காத்துக் கொண்டு இருக்கிறது. இந்த மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் அமல் படுத்தப்பட்டால் நாம் 8 தொகுதிகளை இழக்க நேரிடும். நாம் 8 தொகுதிகளை தாரை வார்த்து கொடுக்க தயாராக இருக்கிறோமா" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஏற்கனவே நிதிகளை தாரை வார்த்து கொடுக்கிறார்கள். நாம் கட்டும் வரிப்பணத்தை வட மாநிலங்களுக்கு தாரை வார்த்து தரப்படுகிறது. இப்போது, நம்முடைய தொகுதிகளையும் தாரை வார்த்து தரப்போகிறோமா என்கிற கேள்வி எழுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் நிதியை வரிப்பணத்தை மிச்சப்படுத்தும் நடவடிக்கை எனக் கூறுகின்றனர். பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும் சலவை விட தேர்தல் நடத்தும் செலவு என்பது மிகவும் குறைவு. ஆக எதற்காக அதிக செலவு என்று உண்மைக்கு புறமான கருத்துகளை கூற வேண்டும். எதற்காக இந்த நாட்டை துண்டாட துடிக்கிறார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனை குழுவை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும், இந்த குழு தேவையற்ற குழு, நாட்டை துண்டாக்கும் குழு எனக் கண்டித்து கடிதம் எழுதி இருந்தார்.
தமிழகத்தின் உரிமை, தென்னிந்தியாவின் உரிமைகளை பறிப்பதற்கான முயற்சிகளில் இவர்கள் இரங்கி விட்டார்கள். இது ஒரு திட்டமிட்ட சதி. தென்னிந்தியா முழுவதும் முதலமைச்சர் தலைமையில் அணியாக திரண்டு நமது உரிமைகள் பாதுகாக்க நாம் ஓர் அணியாக ஒன்று பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டின் தலையில் தொங்கும் கத்தி"- தொகுதி மறுசீரமைப்பை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலின்