சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் தொடர்பான சிக்கல்கள் தொடங்கியது. அதே சமயம், சின்னம் தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போட்டியிடக்கூடிய சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு, கடந்த 2019 மற்றும் 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சின்னம் ஒதுக்குவதில் நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால், கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. இந்த சூழலில்தான், இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்திலும் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்தது. ஆனால், இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மேல்முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றத்தை நாம் தமிழர் கட்சி நாடியிருந்த நிலையில், இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சியினர் புதிய சின்னம் ஒன்றை தேர்வு செய்து, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர். இதில் முதல் கட்டமாக, ஆட்டோ சின்னத்தைக் கேட்டது நாம் தமிழர் கட்சி. ஆனால், வேறு ஒரு கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், கப்பல், படகு, மைக், தீப்பெட்டி மற்றும் ஜன்னல் உள்ளிட்ட பல சின்னங்களை சீமான் தரப்பு பரிசீலனை செய்ததாகவும், அதில் தற்போது நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, சீமான் தொடங்கி அடிமட்டத்தில் உள்ளவர்கள் வரை மக்கள் மனதில் இருப்பது மேடைப் பேச்சுகள் என அறியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தல் நாட்களில் பொது விடுமுறை.. சம்பளம் பெற வாக்கு சான்றினை கட்டாயமாக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! - Proof Of Voting