விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில், 85வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தபால் வாக்கு வசதி செய்து தர வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினருக்கு அவர்கள் பயிற்சி பெறும் மையங்களிலேயே தபால் வாக்கு செலுத்தும் வசதி செய்யப்படும்.
இது தவிர, வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வசதி செய்து தர வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு தபால் வாக்கு செலுத்த விருப்பம் உள்ளவர்கள் அளிக்கும் விண்ணப்பங்களை சரிபார்த்து அவர்களுக்கு தபால் வாக்கு வசதி செய்து தரப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி எம்எல்ஏவாக இருந்த திமுக புகழேந்தி கடந்த ஜூன் 6ம் தேதி உயிரிழந்தார். இதன் காரணமாக விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக தரப்பு வேட்பாளராக அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாமக சார்பில் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிடவுள்ள நிலையில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பெரிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார் விஜய் - செல்லூர் ராஜூ பேச்சு!