சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்தார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
1 | வேட்புமனுத் தாக்கல் துவக்கம் | 14.06.2024 |
2 | வேட்புமனுத் தாக்கல் இறுதி நாள் | 21.06.2024 |
3 | வேட்புமனு பரிசீலனை | 24.06.2024 |
4 | வேட்புமனு வாபஸ் | 26.06.2024 |
5 | வாக்குப்பதிவு நாள் | 10.07.2024 |
6 | வாக்கு எண்ணிக்கை | 13.07.2024 |
தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம், மத்தியபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பானை சின்னத்தில் போட்டியிட்ட முனைவர் ரவிக்குமார் 4,77,033 வாக்குகள் பெற்று 70,703 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பாக்யராஜை வீழ்த்தியுள்ளார். இந்த தொகுதியில் பாமக 1,81,822 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும், 57,242 வாக்குகளுடன் நாம் தமிழர் நான்காம் இடத்திலும் உள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் யாருக்கு செல்வாக்கு?: இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் 72,188 வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர் 65,825 வாக்குகளும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக 32,198 வாக்குகளும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. மீண்டும் நான்கு முனை போட்டி தேர்தல் களத்தில் நிகழுமா?