சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று பெய்த கனமழையினால் சென்னை, பெரம்பூர், பெரியமேடு, புளியந்தோப்பு, பட்டாளம், தியாகராய நகர், வியாசர்பாடி அண்ணாசாலை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கின்றது.
குறிப்பாக, சென்னையின் முக்கிய சுரங்கப் பாதைகளான பெரம்பூர் ரயில்வே சுரங்கப் பாதை, கணேசபுரம் சுரங்கப் பாதை, சுந்தரம் பாயிண்ட் சுரங்கப் பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப் பாதை, மேட்லி சுரங்கப் பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை, வில்லிவாக்கம் சுரங்கப் பாதை, சூரப்பட்டு சுரங்கப் பாதை உள்ளிட்ட 8 சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் முழுவதுமாக தேங்கியுள்ளதால் தற்காலிகமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : சென்னை கனமழை எதிரொலி: நான்கு விரைவு ரயில்கள் ரத்து!
சுரங்கப் பாதை மூடப்பட்டதன் காரணமாக அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சுற்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நாளைய தினம் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் தேங்குவது அதிகமானால் பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்கின்றனர்.
அந்த வகையில், திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் அப்பகுதியை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்கின்றனர். இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், "வீட்டில் மழைநீர் வந்துகொண்டு இருக்கிறது. ஆதலால் வீட்டில் இருக்க வசதி இல்லை.
தண்ணீர் இன்னும் அதிகமானால் குழந்தைகளுக்கு பால், உணவுக்கு மிகவும் சிரமம் ஏற்படும் என்பதால் பாதுகாப்பான இடம் நோக்கி செல்கின்றோம்" என தெரிவித்தனர். முன்னதாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று நள்ளிரவு முதலே கனமழை பெய்து வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்