மதுரை: மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ஜீவாநகர் 1-வது தெருவைச் சேர்ந்த சூர்யா (23) என்ற இளைஞர் தனது பெற்றோர் நடத்திவரும் டீக்கடையை கவனித்துக்கொள்கிறார். இந்நிலையில் சூர்யாவின் நண்பர்களுக்கும், அம்பேத்கர் நகர்ப் பகுதியைச் சேர்ந்த பிரவின்ராஜா என்பவரின் நண்பர்களுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக தெருவிற்குள் யார் பெரிய ஆள் என்பதிலும் அடிக்கடி சண்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த 3 மாதமாக இன்ஸ்டாகிராமில் 'யாரு பெரிய ஆள் மோதிப்பார்க்கலாம் என்றும் விரைவில் சந்திப்போம்' எனவும் பல்வேறு பதிவுகளை பதிவிட்டும் ரீல்ஸ்சும் செய்துவந்ததாகவும், இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி ஜீவாநகர் 1வது தெரு பகுதியில் பிரவின்ராஜா மற்றும் அவரது நண்பர்கள், சூர்யாவை வழி மறைத்து கத்தியால் கையில் வெட்டியுள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்து சூர்யா தப்பியோட முயன்றபோது அவரை துரத்தி தலை, கால் என மாறி மாறி வெட்டியுள்ளனர்.
இதனை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றுதிறண்டதும், அவர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதன் பின்னர், சூர்யாவின் பெற்றோர் சூர்யாவை மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து, படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த சூர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப் பதிவு செய்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், பிரவின்ராஜா, ஜலாலுதீன் (எ) காட்டுப்பூனை, லிங்கராஜா, மாதேஷ், சோமசுந்தரம், முகேஷ் குமார், சதிஸ்குமார் மற்றும் ஒரு சிறுவன் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: “நான் கேட்ட பாட்ட போடு”.. மறுத்த நபர் கொலை.. 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த தஞ்சை கோர்ட்!
இதன் தொடர்ச்சியாக அவர்களிடம் இருந்து கத்தி போன்ற ஆயுதங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்ஸ்டாகிராமில் மோதலை தூண்டும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் வீடியோ மற்றும் ஸ்டேட்டஸ் பதிவிடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக ஸ்டேட்டஸ் வைத்த விவகாரத்தில் இரு தரப்பு மோதலா? அல்லது ஜாதிய ரீதியான மோதல் ஏற்பட்டதா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்