தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் மாரிசெல்வம். இவர் வழக்கறிஞருக்குப் பயின்று விட்டு, கோவில்பட்டியில் உள்ள ஒரு வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்று வருகிறார். இவரது பகுதியில் உள்ள 16 வயது சிறுவனை வீடு வீடாகச் சென்று விலை கொடுத்து ரேஷன் அரிசி வாங்கித் தர வலியுறுத்தி கார்த்திக் ராஜா கட்டாயப்படுத்தி உள்ளார்.
இதற்கு சிறுவன் மறுக்கவே, கார்த்திக் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிறுவனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனை மாரிசெல்வம் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் மாரிசெல்வதுக்கும், கார்த்திக் ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற கார்த்திக் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாகனத்தை, விருதுநகர் பகுதியில் வைத்து போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீசாருக்கு மாரிசெல்வம் தான் தகவல் கொடுத்ததாகக் கூறி, கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் கார்த்திக் ராஜா தலைமையில் 15 பேர் கொண்ட கும்பல் மாரிசெல்வம் வீட்டிற்குச் சென்று, பெட்ரோல் குண்டுகளை வீசியது மட்டுமின்றி, மாரிசெல்வம் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மற்றும் செண்பக வல்லி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாரிசெல்வத்தின் வாகனத்தையும் தீ வைத்துக் கொளுத்தியுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் மற்றும் கொப்பம்பட்டி காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் கார்த்திக் ராஜா உள்ளிட்ட 15 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த பெட்ரோல் வெடிகுண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் விளாத்திகுளம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோரின் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் மாதவா ராஜா தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அக்கும்பலைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக குப்பனாபுரத்தைச் சேர்ந்த அருண்குமார், ஓணமாக்குளத்தைச் சேர்ந்த கணேஷ் குமார், கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த சுடலைமுத்து, கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த சண்முக ராஜ், கயத்தாறைச் சேர்ந்த ராஜா என்ற சண்முக ராஜா, முத்துகிருஷ்ணன், நரசிம்மன் மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் ராஜா உள்ளிட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! - Nainar Nagendran