சென்னை: பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான ஆவணங்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பியதாக சிஎம்டிஏ அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் சவுக்கு சங்கரின் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து, அவர் கோவை மத்திய சிறையில் இருந்து புழல் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர், புழல் மத்திய சிறையில் இருந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் தலைமை மாஜிஸ்திரேட் முன்னிலையில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், சவுக்கு சங்கரை இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத் தாக்கல் செய்தனர். ஆனால், மாஜிஸ்திரேட் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை மட்டும் அவரை விசாரணை செய்ய அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த உத்தரவின் பேரில், சவுக்கு சங்கரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மூன்றாவது தளத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசரணையையடுத்து, இன்று மாலை 6 மணி அளவில் மீண்டும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யூடியூபர் சவுக்கு சங்கர் மீது திருச்சி சூர்யா சிவா பரபரப்பு புகார்! - Trichy Surya Siva