சென்னை: வடகிழக்கு பருவமழை அக்டாேபர் 3 வது வராத்தில் இருந்து துவங்க உள்ள நிலையில், வரும் 14 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் பழுதான கட்டிடங்களை அகற்றவும், மின்சாதனங்களை சரிபார்க்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பள்ளி பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.அதில், வடகிழக்கு பருவமழையை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் மழைக்காலங்களில் முகாம் அமைக்க தேவையான வகுப்பறைகளை தலைமை ஆசிரியர்கள் ஒதுக்க வேண்டும்.
பழுதடைந்த கட்டிடங்கள் இடிப்பு: மாணவர்கள் பள்ளிக்கு வந்து வீட்டிற்கு செல்லும் போது பாதுகாப்பாக செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்வதுடன், நீர்நிலைகளில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும் அறிவுறைகள் வழங்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறைக்கான கட்டிடங்களை பொதுப்பணித்துறையினர் கட்டினாலும், அதனை பாராமரிப்பதற்கு தேவையான நிதி அளிக்காமல் இருப்பதால், பழுதடைந்த கட்டிடங்களை இடிப்பதிலும் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.
எனவே, பள்ளிக்கல்வித்துறைக்கான கட்டிடங்களை பராமரிப்பு பணிகளையும் ஊரக வளர்ச்சித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால், பழுதடைந்த கட்டிடங்களை ஊரக வளர்ச்சித்துறையின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் இடிக்க முடியும். எனவே, பருவமழைக்கு முன்னர் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்" - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தகவல்!
மேலும், மின் இணைப்புகளை கண்காணிக்கவும், வடிகால்களை சுத்தம் செய்தல், திறந்தவெளி கால்வாய்களை தூர்வாரி மூடிவது, குழிகளை நிரப்புவது, மாணவர்களின் பாதுபாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல் வேண்டும். பேரிடர் காலங்களில் பாதிப்பிற்குள்ளாகும் மக்களை பள்ளிகளில் தங்க வைக்க பள்ளி மற்றும் உணவுக் கூடங்களில் சாவி வைத்திருக்கும் பொறுப்பாளர் விவரங்களை வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அளிக்க வேண்டும்.
பெற்றோர்களுக்கு அறிவுரை: பள்ளி மேற்கூரைகளில் தண்ணீர் தேங்குவதைக் கண்காணித்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பலவீனமான மற்றும் பழுதடைந்துள்ள கட்டடங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும். கட்டிடங்களின் மேற்கூரையின் தளம் சரியாக உள்ளதை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் மாணவர்கள் குளிப்பதை தவிர்க்க பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
பருவக் காலங்களில் வரும் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அறிவுரை வழங்குவதுடன், நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் கொதிக்க வைத்த வெந்நீர் அருந்த அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளில் கனமழையால் நீர் தேங்கும் காலங்களில் நீர் இறைக்கும் எந்திரங்களை, வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் இதர அலுவலகங்களில் உள்ளதா? என்பதையும் தலைமை ஆசிரியர்கள் உறுதிச் செய்ய வேண்டும்.