சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர், அண்ணாதுரை, எம்ஜிஆர் ஆகியோரக்கு சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா 'கருணாநிதி நினைவு நாணயம்' வெளியிட மத்திய அரசுக்கு கடந்தாண்டு ஜூலை 23ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
இதனை அடுத்து, நாணயம் வெளியிடுவதற்கான ஆயத்த பணிகள் முடிந்த நிலையில், நாணய வெளியீடு அனுமதி கடிதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்டுள்ளார். அதனை அடுத்து கருணாநிதியின் 100வது பிறந்த நாள் விழாவை உணர்த்தும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயம், அதன் அமைப்பு, உள்ளடக்கம் விலை ஆகியவை முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இந்த நாணயத்தை அச்சிடுவதற்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாணயத்திற்கான மாதிரி வரைபடம் தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்டது.
மேலும், இந்த கருணாநிதி நினைவு நாணயத்தை மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடுகிறது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் 'டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி' என்ற பெயருடன், 'தமிழ் வெல்லும்' என்ற தமிழ் வாசகம் கருணாநிதி நினைவு நாணயத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், வருகிற 18ஆம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100 ரூபாய் நினைவு நாயணத்தை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாணயத்தைப் பெற்றுக் கொள்கிறார்.
இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள், தமிழக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் உறுப்பினர்கள், கூட்டணி கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழா அழைப்பிதழ் கொடுக்கும் பணிகளை தமிழக அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
இதுமட்டும் அல்லாது, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “தமிழகத்தில் 20 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்”- அமைச்சர் மா.சு. தகவல்