சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் நாளான இன்று சிவகங்கை மற்றும் வேலூர் தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அடுத்தகட்ட உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் எப்படி சிறப்பாக செயலாற்றுவது என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், பெண்களையும், இளைஞர்களையும் அதிகமாக கட்சிப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்னைகளை இனங்கண்டு மாதத்திற்கு இரண்டு போராட்டங்களையாவது முன்னெடுக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கியதாகவும் கூறினர்.
அதேபோல, நேற்றைய நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட ஆலோசனைகள் இன்றைய நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்திலும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்த தெளிவான முடிவுகளை அதிமுக தலைமை எடுக்காத காரணத்தால், பல இடங்களில் தோல்வி அடைய காரணம் என கட்சி நிர்வாகிகள் அந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய கூட்டத்தில் சிவகங்கை தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, பாஸ்கரன், ராஜன் செல்லப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "நீங்கள் பேசினால் அது கருத்துரிமை, நாங்கள் பேசினால் அது அவதூறா?" - சீமான் ஆவேசம்!