தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று (மார்ச் 26) பிரச்சாரம் மேற்கொண்டார். தூத்துக்குடி தமிழ் சாலை ரோட்டில் உள்ள சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பிரமாண்ட மேடையில் அவர் பேசுகையில், "அதிமுக கூட்டணி பற்றி எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். 2011-இல் அதிமுக மிகப்பெரிய கூட்டணி வைத்தது, ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது எதிர்கட்சியாக வீற்றிருந்த தேமுதிகவுடன் கூட்டணி வைத்து, தற்போது பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது, ஆனால், திமுக பக்கம் பாருங்கள், கடந்த ஐந்தாண்டு காலமாக கூட்டணி கட்சியினர் திமுகவிற்கு ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கின்றனர். மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கவில்லை, விலைவாசி உயர்வுக்கு போராட்டம் இல்லை. தொழிலாளர் ஸ்ட்ரைக் அதற்கு குரல் கொடுக்கவில்லை, விவசாயிகள் போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம், பஸ் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கம்யூனிஸ்ட், காங்கிரஸ் அதற்கு வாய் திறக்காமல் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார்கள்.
தென் தமிழகத்தில் டிசம்பர் 17 அன்று மிக கனமழை பெய்யும் என ஒரு வாரத்திற்கு முன்பு வானிலை ஆய்வு மையம் மிகப்பெரிய அறிவிப்பு கொடுத்திருந்தது. அப்போது உடனடியாக அரசாங்கம் எச்சரிக்கையாக இருந்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், பொம்மை முதலமைச்சர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை, ஆகவே துத்துக்குடி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.
ஆனால், அதைப் பார்க்க முதலமைச்சர் வரவில்லை, இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு டெல்லி சென்று விட்டார், மக்களைப் பற்றி கவலை இல்லை. இப்படிப்பட்ட நிலையில், முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் இறங்கி, மக்களுக்குத் தேவையான உணவை உரிய நேரத்தில் கொடுத்திருக்க வேண்டும், பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்திருக்க வேண்டும், இதுதான் ஒரு அரசின் கடமை, ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை.
ஆட்சி அதிகாரம் வேண்டும் என சென்றனர், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், அதுபோல ஸ்டாலின் நடவடிக்கை இதிலிருந்து பார்த்துக் கொள்ளலாம். மக்களைப் பற்றி கவலைப்படாத முதலமைச்சர், அவருக்கு ஆட்சி அதிகாரம் தான் முக்கியம், அதனால்தான் டெல்லி ஓடினார். தூத்துக்குடி மக்களை அவர் பார்க்கவில்லை, ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, மக்களுக்கு சேவை செய்வதில் முதல் கட்சி அண்ணா திமுக கட்சி. ஆனால், அவர் அதிமுகவைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்" என பேசினார்.
இதையடுத்து ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் மோடியுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த புகைப்படத்தைக் காண்பித்து, “அண்ணா திமுக கள்ளக் கூட்டணி வைத்து இருக்கிறதாம், இவ்வாறு பேசுவது அவர்களுக்கு பழக்கதோஷம் போல் இருக்கிறது, இவர்தான் கள்ளக் கூட்டணி வைத்துள்ளனர், நீ காட்டினால் சரி, நான் காட்டினால் தவறா? சிரிக்கிறது தப்பா? இதுதான் கள்ளக் கூட்டணிக்கு சான்று” என்றார்.
தொடர்ந்து, “நாங்கள் நினைத்தால் பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்திருப்போம், உங்களைப் போன்று பதவி பிடித்த கட்சி அண்ணா திமுக கட்சி அல்ல, மக்களுக்கு சேவை செய்வதற்காக ஜெயலலிதா, அதிமுகவை உருவாக்கி கட்டிக் காத்தார்கள். நீங்கள் தான் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு குடும்ப உறுப்பினர்கள், ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும், மத்தியிலும் ஆட்சியில் இருக்க வேண்டும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்க வேண்டும், மத்தியில் கொள்ளையடிக்க வேண்டும், மாநிலத்தில் கொள்ளையடிக்க வேண்டும், அதுதான் உங்களுடைய திட்டம்.
நான் நினைத்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கலாம், அந்த எண்ணம் எங்களுக்கு இல்லை, அந்த பதவி எங்களுக்கு வேண்டாம், தமிழ்நாட்டு வாக்காளர்கள் வாக்களித்து எங்களை தேர்ந்தெடுக்கிறார்கள், அவர்கள் உரிமையை காப்போம், தமிழ்நாட்டில் தேவையான நிதியை, திட்டங்களை பெறுவோம், சிறுபான்மை மக்களை பாதுகாப்போம், அது மட்டுமல்லாமல் சுதந்தரமாக செயல்படுவோம். ஆகவே பாஜகவிடமிருந்து விலகி பிரமாண்டமான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றறோம்.
23ஆம் புலிகேசி படத்தை போல, பிரதமர் சென்னை வந்த போது கருப்பு கொடி பிடித்தால் பிரதமர் கோவித்து கொள்வார் என்று வெள்ளை குடை பிடித்தார் ஸ்டாலின், அதற்கு மக்கள் வெள்ளைக் கொடி ஏந்திய பொம்மை வேந்தர் என்றனர். உள்ளே பயம், நேரில் பார்த்தால் சரணாகதி அடைந்து விடுவார்கள்” என்றார்.
உதயநிதி மற்றும் முதலமைச்சர் ஜாபர் சாதிக்குடன் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி பேசிய அவர், “தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்காத இடமே இல்லை, சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜாபர் சாதிக், பல ஆண்டுகளாக வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கடத்தியுள்ளார், விரைவில் உங்கள் முகத்திரை கிழிக்கப்படும்.
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நிலம் அதிமுக ஆட்சியில் ஒத்துக்கப்படது, இஸ்ரோ குலசேகரப்பட்டினம் விரிவாக்கத்திற்கு 2,000 ஏக்கர் நீலம் அதிமுக ஆட்சியில் கையகப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்டது. அதனால் ஒரு சிறப்பான, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ளது.
அவர்கள் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனை பேசுவது போல் தெரியவில்லை, மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுத்து அழுத்தம் கொடுக்கவில்லை, நீட் தேர்வு ரத்து என்று சொன்னீர்கள் அதையும் நிறைவேற்றவில்லை, ஆகவே மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்” என பிரச்சாரத்தின்போது பேசியுள்ளார்.