தேனி: தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம், தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக வேட்பாளர் நாராயணசாமி எளிமையானவர். அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் மிட்டா மிராசுதார் போல் அதிகாரம் படைத்தவர்கள்.
திமுக வேட்பாளர், அமமுக வேட்பாளர் எங்கிருந்து சென்றவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். 14 ஆண்டு காலம் வராமல் இப்போது பதவிக்காக வந்துள்ள டிடிவி தினகரன், கட்சி மாறி சென்றவர்களுக்கு ஜெயலலிதா உரிய தண்டனை வழங்குவார்” என்று பேசினார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திடீரென கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த திரையில் டிடிவி தினகரன் குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது. அதில், "டிடிவி தினகரன் நோட்டாவுக்கு கீழ் உள்ள பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம்” என அவர் பேசிய பழைய காணொளி ஒளிபரப்பப்பட்டது."
பின்னர் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “திமுக மற்றும் அமமுக வேட்பாளருக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அதிமுக வேட்பாளர் மாபெரும் வெற்றி பெறுவார். நானும் ஒரு விவசாயி தான். அதனால் தான் விவசாயியாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும்.
இதுவரை எந்த கூட்டத்திலும் ஸ்டாலின் விவசாயிகள் பற்றி பேசியது இல்லை. விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாத ஒரே அரசு திமுக அரசு. ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். அதிமுக ஆட்சியில் பொதுமக்களின் நலனுக்காக கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது.
ஸ்டாலினுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் விதமாக, இந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பர். பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச மடிக்கணினி திட்டத்தை திமுக ரத்து செய்தது. அதிமுக ஆட்சி மீண்டும் வந்ததும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் கொண்டு வரப்படும்.
விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். மத்தியில் 38 எம்.பிக்கள் இருந்தும் தமிழ்நாட்டிற்கு இதுவரை எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை முறியடிக்கக் கூடிய சக்தியாக அதிமுக இருக்கும். அது பாஜகவாக இருந்தாலும் சரி.
திமுக எதிர்கட்சியாக இருந்தபோது கோ பேக் மோடி என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு வெல்கம் மோடி என்று சொல்கிறார்கள். எனக்குப் பின்னால் இங்கு இருக்கக் கூடிய தொண்டர்கள் யார் வேண்டுமானாலும், பொதுச் செயலாளராக வருவார்கள். ஆனால், ஸ்டாலினைப் போல் வாரிசு அரசியல் இங்கு இல்லை.
40 தொகுதியிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். செல்லும் இடமெல்லாம் என்னைப் பற்றி பேசுகிறார் ஸ்டாலின். என்னைப் பற்றிப் பேசி நாட்டு மக்களுக்கு என்ன பிரயோஜனம், மக்களுக்கான திட்டங்களைப் பேசுங்கள்” என்று கூறினார். பின்னர், "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம், வாக்களிப்போம் இரட்டை இலைக்கு” என்ற கோஷங்களை அதிமுகவினர் எழுப்பினார்.
இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மு.க.ஸ்டாலின் மீது அதிமுக புகார்! - LOK SABHA ELECTION 2024