நீலகிரி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அஇஅதிமுக கட்சியின் சார்பாகத் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதகை ஏ.டி.சி திடலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
நீலகிரி மாவட்ட நாடாளுமன்ற அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், "நாடு தலைகுனிவு ஏற்படும் வகையில் ஊழல் செய்த கட்சி திமுக. ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக திமுக வேட்பாளர் ஆ.ராசா திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.
திமுக அமைச்சர்கள் காங்கிரஸ் அமைச்சகத்தில் இடம்பெற்று இருந்தார்கள். தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் விரைவில் இங்கு இருப்பாரா அல்லது அங்கு இருப்பாரா எனத் தெரியும்.
பச்சை தேயிலைக்கு அஇஅதிமுக ஆட்சியில் மானியம் வழங்கப்பட்டது. இந்த தேயிலை தொழிலைக் காப்பாற்றுவதற்காக அஇஅதிமுக அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டது. மீண்டும் உங்களுடன் அஇஅதிமுக ஆட்சி மலரும். அப்போது பச்சைத் தேயிலை விவசாயிகளுக்கு வாழ்வு மலரும்" என்றார். இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: “அதிமுக எம்எல்ஏவிடம் கேள்வி கேட்டதற்காக என் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்” - காவல் நிலையத்தில் பெண் புகார்! - Questioning Admk Mla