தருமபுரி: தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் நீண்ட காலமாக வாழ்ந்த மலைவாழ்மக்களான பூர்வகுடிகளை வலுக்கட்டாயமாக துன்புறுத்தி காவல்துறையினர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றியதாக தெரியவருகிறது. இதனிடையே, அங்குள்ள பெண்களை தகாத முறையில் திட்டியும் துன்புறுத்தி வன்முறையில் ஈடுபட்டதாக காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. அதோடு, இப்பகுதியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பொதுமக்களை உடனடியாக மீண்டும் அதே இடத்தில் வீடுகளைக் கட்டித் தரவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவும், இம்மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் தனது கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களை வெளியேற்ற அவர்களின் வீடுகளை உடைத்து, பெண்களைத் தாக்கி வன்முறையைக் கையாண்ட விடியா திமுக அரசின் வனத்துறை மற்றும் காவல்துறையின் செயலுக்கு எனது கடும் கண்டனம்.
மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி மக்களை அடிப்படை மனிதாபிமானம் கூட இன்றி வலுக்கட்டாயமாக அவர்களின் இருப்பிடத்தை விட்டு அராஜகப் போக்குடன் வெளியேற்றுவதும், பெண்கள் மீது ஆண் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
சட்டத்தின் நெறிகளை மீறி செயல்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்' என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.