சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி மாநகர் வீரப்பம் பாளையம் பகுதியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “தமிழக வெற்றி கழகம் அதிமுகவை ஏன் விமர்சிக்கவில்லை என்று அனைவரும் துடிக்கின்றனர்.
அதிமுக மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. மக்களுக்காக ஏராளமான திட்டங்களை கொடுத்த கட்சி. இந்த கட்சியை எப்படி விமர்சிக்க முடியும். அதனால் மற்ற கட்சிகள் அதிமுகவை பற்றி விஜய் ஏன்? பேசவில்லை என்று யாரும் ஆதங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஸ்டாலின் தலைமையான திமுக ஆட்சியில் ஒரு துறை மட்டுமல்ல பல துறைகளில் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முறையாக இவையெல்லாம் விசாரிக்கப்பட்டு யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனரோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் தான் ஏராளமான திட்டங்கள் மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: சட்டமன்றத் தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை..?
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இப்போது அந்த கூட்டணியில் தான் உள்ளோம் என்று கூறினால் பிறகு வெளியில் போக உள்ளார்கள் என்று அர்த்தம். கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்த போராட்டமும் நடத்தவில்லை. இப்போது தான் போராட்டங்கள் நடத்துகின்றனர்.
திமுக ஆட்சியில் தமிழகத்தின் பல பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சேலத்தில் அவர்கள் வீட்டின் மீது ஏறி அடித்து உடைத்து சிலர் தாக்கி உள்ளனர். எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதுபோல்தான் பொதுக்குழு முடிவின் அடிப்படையில் நீக்கப் பட்டவர்களுக்கு அதிமுகவில் இனி இடம் கிடையாது” என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்