சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பதைக் கண்டித்தும், போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
மனிதச் சங்கிலி போராட்டத்தில், தமிழக அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதத்தின் பெயரில் நாட்டை பிரிக்க அதிமுக தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பைப் பதிவு செய்து வருவதாகக் கூறினார். 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிமுக எம்.பி பாலசுப்பிரமணியன், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக உரையாற்றியதை அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும், சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நாளிலிருந்து திமுக அரசு தொடர்ந்து ஆதரித்து வந்ததைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, 2010ஆம் ஆண்டு சிஏஏ சட்டத்துக்குத் தமிழகச் சட்டப்பேரவையில் ஒப்புதல் தெரிவித்தது மட்டுமல்லாமல், சிஏஏ சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என்பதை நாளிதழ்களில் வெளியான செய்திகளை ஆதாரமாகக் காண்பித்துப் பேசினார்.
மதத்தின் பெயரில் நாட்டை பிரிக்கக் கூடாது என்ற கொள்கையில் அதிமுக தொடக்கத்திலிருந்து உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், போதைப் பொருள்கள் வழக்கில் தொடர்புடைய திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளார். ஜாபர் சாதிக் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும். குறிப்பாக இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு