திருச்சி: நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், போட்டியிடும் அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. முன்னதாக, மார்ச் 22ஆம் தேதி முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ மற்றும் பெரம்பலூர் வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து, தனது முதல் பிரசார பொதுக்கூட்டத்தை திருச்சி தொடங்கினார்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியும் தனது முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை திருச்சியில் தொங்க உள்ளார். குறிப்பாக, அதிமுக தலையிலான கூட்டணியில் உள்ள 40 வேட்பாளர்களையும், ஒரே மேடையில் ஆதரித்து பிரசாரத்தைத் தொடங்க உள்ளார்.
இதையும் படிங்க: "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்" - எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரை வீடியோ வைரல்
இதற்காக, ஶ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோயில் பகுதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம் 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார்.
பின்னர், திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதனைத்தொடர்ந்து, மாலை 4.40 மணியளவில் வண்ணாங்கோயில் அருகே நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இரவு 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்ட உள்ளார். இதில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மத்தியில் பாஜக ஆட்சியமைக்க திமுகவே ஆதரவளிக்கும்' - அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி