சென்னை: இன்றைய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் மரணமடைந்த விவகாரம் குறித்து, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்டார். அப்போது, கேள்வி நேரம் என்பதால் விதிகளுக்கு மாறாக பேச அனுமதிக்க முடியாது என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
இருப்பினும், அதனை மீறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதாகைகளுடன் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். அதனை அடுத்து, பேரவைத் தலைவரின் உத்தரவின் அடிப்படையில் ஆர்.பி உதயகுமார், தளவாய் சுந்தரம், அக்ரி.எஸ் கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டனர்.
அதன் பின்னர், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். இதனிடையே, முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுப்பதாகவும், அவர் பதவி விலக வேண்டும் எனக் கூறி தனது 'X' சமூக வலைத்தள பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பகிர்ந்துள்ளார்.
அதில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விவாதம் நடத்தக்கோரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டபோது அவையில் இல்லாமல் ஒளிந்துகொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், சபாநாயகர் எங்களை வலுக்கட்டாயமாக அராஜகப் போக்குடன் வெளியேற்றிய பிறகு வந்து, தான் 'ஜனநாயக மாண்பு காப்பாளர்' என்று ஒரு நாடகமாடி, கள்ளச்சாராய மரணங்கள் குறித்த முற்றிலும் ஏற்கத்தகாத ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
அதிமுகவினர் சபையில் இல்லாதபோது வந்து, தான் ஓடி ஒளியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது நகைப்புக்குரியது. சென்ற ஆண்டு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 23 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த பிறகாவது, இந்த விடியா திமுக அரசு கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று கள்ளக்குறிச்சியில் இச்சோகம் நிகழ்ந்திருக்காது.
எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு முதலமைச்சர் ஸ்டாலின் தான். மூன்றாண்டுகள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, இப்போது வந்து 'நான் அதிகாரிகளை மாற்றிவிட்டேன்' என்று சொல்வது பொறுப்பற்றத் தன்மையின் உச்சம். மக்கள் நலன் ஒன்றே அதிமுகவின் அரசியல் ஆதாயம்.
அந்த ஆதாயம் நிறைவேற நாங்கள் அனைத்து ஜனநாயக வழிகளிலும் போராடுவோம். கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி நீங்கள் சட்டப்பேரவையில் அரங்கேற்றிய அராஜகம், தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டிராத ஜனநாயகப் படுகொலை. ஜனநாயக மாண்பைப் பற்றி பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை.
நீங்கள் அதிகாரிகளை மாற்றவே 50 உயிர்கள் பலியாக வேண்டுமா? இப்போது நீங்கள் வாசிக்கும் பட்டியலால் போன 50 உயிர்கள் மீண்டும் வந்துவிடுமா? மனசாட்சி என்பது கொஞ்சமும் இருந்தால் பதவி விலகுங்கள்" என எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: "நான் ஓடி ஒளிபவன் அல்ல; இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறேன்" - சபையில் முதல்வர் ஆவேசம்