புதுக்கோட்டை: திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு வந்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு புதுக்கோட்டை மாவட்ட விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான விஜயபாஸ்கர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மிகப் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். கும்மி ஆட்டம், கோலாட்டம், கரகாட்டம் ஆகியவற்றுடன் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி அங்கு கூடியிருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், “கரோனா காலகட்டத்தில் அனைவரும் உயிருக்கு பயந்து வெளியே வராமல் இருந்தனர். அப்போதைய நிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு மிகப்பெரும் பாடுபட்டார்.
இதேபோன்று விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. ஆனால், திமுக அரசு அந்தத் திட்டத்தையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கியுள்ளது.
இதே போன்று ஏழை, எளிய மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காக அதிமுக அரசில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக், திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடப்பட்டுள்ளது. அதே போன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டமும் முடக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது. ஆனால், வரும் 2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த திட்டங்கள் அனைத்தும் மீண்டும் அமல்படுத்தப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அரசிற்கு மரண அடி கொடுக்க வேண்டும். அதற்கு மக்கள் தயாராகி விட்டனர்” என்றார். பின்னர் நிகழ்ச்சியின் நிறைவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சாக்லேட் மாலை அணிவித்து, வேல் பரிசாக அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அரசியல் பிரமுகர்கள் பிரச்னையால் நிறுத்தப்பட்ட மண்டையூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது!