சேலம்: ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவிற்கு எனக்கும் அழைப்பு வந்தது. அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம் தான் இருந்தது. மாநில அரசின் செயலாளர் பெயர் தான் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு நடத்தியதாக முதலமைச்சர் கூறுகிறார்.
திமுக அரசை குற்றம்சாட்டினால், பாஜக மாநிலத் தலைவர் என்னை குறை சொல்கிறார். மத்திய தலைவர்கள் வெளியிட்டதால் தான் எம்.ஜி.ஆருக்கு புகழ் என பாஜக கூறிக் கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளில் பாஜக ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, கடன் சுமை தான் அதிகரித்துள்ளது. திமுக, ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் உள்ளது. பல்வேறு ஊழல் வழக்குகள் நிறைந்த ஆட்சியாக உள்ளது.
அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி, மோசமான ஆட்சி என்று விமர்சனம் செய்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணி வைத்து போட்டியிட்டபோது தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். பாஜகவின் உறவை முறித்த போது அதிமுக கெட்டதாக தெரிகிறது. திமுகவைப் போல பாஜகவும் இரட்டை வேடம் போடுகிறது.
அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை. அண்ணாமலை பிறப்பதற்கு முன்னதாகவே எம்.ஜி.ஆர் தமிழ்நாடு முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களைப் பெற்றவர் என்று பெருமையாக சொல்லப்படுபவர். அப்போது உங்கள் தலைவர்கள் எந்தப் பதவியிலும் இல்லை.
மத்தியில் ரூ.55 லட்சம் கோடியாக இருந்த கடன், 10 ஆண்டுகளில் 165 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அண்ணாமலை மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. பொய்களை மட்டுமே பேசுபவர் தான் தமிழக பாஜக தலைவராக உள்ளார். அதிமுக ஆட்சியில் ஊழல் இருந்ததாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதியைப் பற்றி புகழ்ந்து பேச உத்தரவு போட்டது யார் என்பது மக்களுக்கு தெரியும். நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படைத்தன்மையாக தெரிவித்துள்ளார். திமுகவும், பாஜகவும் தான் நாடாகமாடுகிறார்கள். நாடகத்தை வெளிக்கொண்டு வந்தது ரஜினிகாந்த் தான். வெளியில் திமுகவும், பாஜகவினரும் எதிரி போன்று தோற்றமளிக்கிறார்கள். ஆனால் உள்ளுக்குள் உறவு வைத்துள்ளனர்” என்றார்.
விஜய் கட்சியின் பாடலின் மூன்றெழுத்து மந்திரம் என்று எம்ஜிஆர், அண்ணா ஆகியோரை குறிப்பிட்டுள்ளது குறித்த கேள்விக்கு, “எங்கள் தலைவருக்கு கிடைத்த பெருமை என்று நினைக்கிறேன். முழுமையாக நடிகர் விஜய் அரசியலுக்கு வரவில்லை. அதிமுகவுடன் அவரது கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்ய முடியும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்வதை மட்டும் தான் வேலையாக வைத்துள்ளார். அனைத்து தலைவர்களும் உழைத்து பதவிக்கு வந்தவர்கள். ஆனால், உழைக்காமல் பதவிக்கு வந்த ஒரே தலைவர் அண்ணாமலை மட்டும்தான். இவருக்கு பதவி கிடைத்தவுடன் தலை, கால் தெரியாமல் ஆடிக்கொண்டு வருகிறார். தன்னை முன்னிலைப்படுத்தியும், விளம்பரப்படுத்தியும் பேச வேண்டும் என்ற எண்ணம் அண்ணாமலைக்கு உள்ளது.
கார் பந்தயம் நாட்டிற்கு ரொம்ப முக்கியமா? சுய விளம்பரத்திற்காக இந்த கார் பந்தயம் நடத்துகின்றனர். மக்கள் அதிகமாக நடமாடக்கூடிய பகுதியில் இந்த கார் பந்தயம் நடத்துகிறார்கள். தமிழகத்தில் பலர் சைக்கிள் கூட இல்லாமல் உள்ளனர். மருத்துவமனை, துறைமுகம் உள்ள முக்கியமான பகுதியில் கார் பந்தயம் நடத்துவது அவசியமா?
அதிமுகவைப் பொறுத்தவரை, தமிழக மக்களுக்கு யார் ஆதரவளிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவளிப்போம். யார் தீங்கு விளைவிக்கிறார்களோ அவர்களை எதிர்ப்போம். அதனால்தான் தனித்துப் போட்டியிட்டோம்” எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஜவுளி கழிவு மறுசுழற்சி தொழிலுக்கு தனி வாரியம் அமைக்க வலியுறுத்தல்!