சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது. இந்நிலையில், வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானு மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதில், போதைப் பொருள் வழக்கிலோ? அல்லது அமலாக்கத்துறை வழக்கிலோ? தங்களது பெயர் இடம் பெறாத நிலையில், தங்களை உள்நோக்குடன் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால், முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன்பு இன்று (ஜூலை 29) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் அமீனா பானு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொத்துக்கள் ஏதும் இதுவரை வாங்கவில்லை. திரைத்துறையின் மூலம் கிடைத்த வருமானத்தில் 2016ம் ஆண்டு 5000 சதுர அடி நிலம் வாங்கப்பட்டது. இவரது பெயரில் எந்த நிறுவனங்களும் இல்லை. எதிலும் முதலீடு செய்யவில்லை. இவருக்கு எதிராக எந்த ஆவணங்கள் உள்ளது? எந்த காலக்கட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது? என தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக்கின் மனைவி குறித்து முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 7 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது. போதை பொருள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 20 கோடி ரூபாயை தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என்பது ஆவணங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது என தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை நீதிபதி நாளை (ஜூலை 30) ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: 'உயிருக்கு பயந்தோடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு'.. தூத்துக்குடி சம்பவத்தில் நீதிபதிகள் வேதனை கருத்து!