சென்னை: கத்தாரில் பணியாற்றி வந்த பெரியகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சசிகலாவின் கணவர் முருகேசன் நாராயணசாமி உயிரிழந்ததையடுத்து, அவரது உடல் தற்போது தமிழ்நாடு வந்து சேர்ந்துள்ளது என மதிமுக முதன்மைச் செயலாளர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவுள்ளார்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெரியகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சசிகலாவின் கணவர் முருகேசன் நாராயணசாமி கத்தார் நாட்டில் கடந்த ஜூன் 24ஆம் தேதி இரவு மறைந்தார். அதனைத் தொடர்ந்து, முருகேசன் பணிபுரிந்த நிறுவனம் அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்ப போதிய ஒத்துழைப்பை தராததால், முருகேசனின் மனைவி சசிகலா மதிமுக ஒன்றிய செயலாளர் வைரமூர்த்தியிடம், தனது கணவனின் உடலை பெற்றுத் தரும்படி உதவி கேட்டுள்ளார்.
பெரியகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சசிகலா முருகேசன் அவர்களின் கணவர் முருகேசன் நாராயணசாமி உடல் தமிழகம் வந்து சேர்ந்தது..!
— Durai Vaiko (@duraivaikooffl) July 30, 2024
திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெரியகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சசிகலா முருகேசன் அவர்களின் கணவர் முருகேசன்… pic.twitter.com/x6QS5bf4KM
பின்னர், இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட மதிமுக செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தியிடம் தெரிவித்துள்ளனர். அவர் கடந்த 27ஆம் தேதி இதுகுறித்து எம்பி துரை வைகோவிடம் தெரிவித்துள்ளார். துரை வைகோ இந்த தகவலை உடனே கத்தாரில் இருக்கும் மதிமுக இணையதள ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷை தொடர்பு கொண்டு முருகேசன் உடலை விரைவாக இந்திய கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, கத்தார் அரசாங்கம் மற்றும் கத்தாரில் இருக்கும் இந்திய தூதரகத்தின் ஒப்புதலைப் பெற்று இரண்டு நாட்களுக்குள் அனைத்து நடைமுறைகளையும் முடித்து, முருகேசனின் உடல் நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை வந்தடைந்தது. முருகேசன் பணி புரிந்த நிறுவனம் போதிய ஒத்துழைப்பைத் தராததால், முழு செலவையும் ஏற்று முருகேசன் உடலை இந்தியா கொண்டு வர பெரும் உதவியாய் இருந்த தொழில் அதிபர் சையத் யாசிர் நைனார், கத்தார் தமிழ் சங்கத்தின் செயலாளர் மணி பாரதி, மதிமுக இணையதள அணி ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ் என அனைவருக்கும் துரை வைகோ நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், குவைத் நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான சமூக ஆர்வலர் மதி என்பவரின் உதவியால் சென்னையிலிருந்து முருகேசனின் உடல் சொந்த ஊருக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம் கொண்டு செல்லப்பட்டது. அதற்காகவும் துரை வைகோ நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதேபோல, குவைத் நாட்டில் இறந்த ஒருவரின் உடலை சொந்த ஊரான திருச்சிக்கும், இலங்கையில் இறந்த ஒருவரின் உடலை கொண்டுவர அந்நாட்டு மதிப்பில் ரூ.8 லட்சம் கேட்ட நிலையில் சொந்த ஊரான தஞ்சைக்கும் கொண்டுவர துரை வைகோ முயற்சி எடுத்து, அவர்களின் உடல்களும் சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தன. இந்த ஒரு மாதத்தில் மட்டும் துரை வைகோ முயற்சியால் 3 தமிழர்களின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
"சக மனிதனின் கண்ணீரைத் துடைக்கின்ற இந்த பணிகளை உணர்வுப் பூர்வமாகவும், அவர்களின் துயர நிலையை உணர்ந்தும் விரைவான முயற்சிகள் எடுத்தேன்" என எம்பி துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்