திருநெல்வேலி: தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் தாக்கமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
மலைப் பகுதியில் பெய்யும் தொடர்மழையால் மலையிலிருந்து பாய்ந்து ஓடும் தண்ணீர் அணைகளுக்கு செல்கிறது. எனவே தொடர்மழையால் திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், காரையாறு, மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதே போல் அணைகளுக்கு நீர்வரத்து ஐந்தாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, காரையார் அணைக்கான நீர்வரத்து 2.928.6 கன அடியிலிருந்து 4,912 கன அடியாக அதிகரித்து, நீர்மட்டம் 91.3 அடியிலிருந்து கிடுகிடுவென ஒரே நாளில் சுமார் 6 அடி உயர்ந்து 97.15 அடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் வரை நீர்மட்டம் 88 அடியாக மட்டுமே இருந்துள்ளது. கடந்த மூன்று நாளில் 9 அடி உயர்ந்துள்ளது. இதேபோல் சோ்வலாறு அணையின் நீர்மட்டம் 105.74 அடியிலிருந்து சுமார் 7 அடி உயர்ந்து 112.5 அடியாகவும் உயர்ந்துள்ளது.
மேலும் பிரதான அணைகளான மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை அளவை பொறுத்தவரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நாலு முக்கில் சுமார் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ஊத்துமலை பகுதியில் 9 சென்டிமீட்டர் மழை பொழிவும், காக்காச்சி மலை பகுதியில் 8.2 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது. மாஞ்சோலையில் 4.5 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவான நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 43.58 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதற்கிடையில் தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலங்களான களக்காடு, தலையணை மற்றும் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறை 2வது நாளாக தடை விதித்துள்ளது. அதேசமயம் களக்காடு தலையணையை பார்வையிட மட்டும் வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: உதகையில் கனமழை; ராட்சத மரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!