திருச்சி: திருச்சியில் பாஜக கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி முடித்த பின்னர் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "பாஜக உடனான கூட்டணி உறுதி ஆகிவிட்டது. பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் டெல்லி பிரிநிதி கிஷன் ரெட்டி ஆகியோர் என்னிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்களிடம், பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளேன்.
கடந்த மூன்று மாதங்களாக பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு தான் இருந்தது. இன்று அதிகாரப்பூர்வமாகப் பேசினோம். அவர்களிடம் ஏற்கனவே அமமுகவின் கோரிக்கைகளைக் கடிதம் மூலமாகக் கொடுத்திருக்கிறோம்.
உறுதியாக பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டிலே வெற்றி பெற பாஜகவிற்கு அமமுக ஒரு அணிலைப் போல் உதவிகரமாக இருக்கும். கடந்த 6 மாதங்களாகவே எங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாகக் கடந்த 3 மாதங்களாகக் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எத்தனை தொகுதி என்பதெல்லாம் பிரச்சனையே கிடையாது. எங்களின் தேவை என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால், உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என்று பாஜக நிர்ப்பந்திக்கவில்லை. எங்களிடம் தனிச் சின்னம் உள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக பாஜக திட்டங்களைக் கொண்டுவந்தால் அவர்களுடன் என்னால் கூட்டணி சேர முடியாது என்று கூறினேன். ஆனால் தற்போது பாஜக தமிழகத்தைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் அமல்படுத்தவில்லை.
அதேபோல், வருங்காலங்களில் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவர உள்ளதாகப் பிரதமர் மோடி தொடர்ந்து தெரிவித்து வருகிறார். எனவே எவ்வித உறுத்தலும் இன்றி தான் அவர்களுடன் கூட்டணி வைக்கிறோம்.
1999 நாடாளுமன்றத் தேர்தலின் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி போக மாட்டோம் என கூறினார்கள். அவரே 2004ல் கூட்டணிக்குச் சென்றார்கள். ஆகவே இந்த காலகட்டத்திற்குத் தமிழகத்திற்கு என்ன தேவையோ அதன் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம்.
ஆர்.கே.நகரின் தேர்தலின் போது அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். தற்போது, அமமுக பற்றி என்னைப் பற்றில் புரிந்துக் கொண்டிருக்கலாம். 2021ல் பாஜகவுடன் கூட்டணிக்குச் செல்வதற்கான வாய்ப்பு இருந்தது. அது சரிவரவில்லை தனித்து நின்றோம். ஆனால் தற்போது நாங்கள் நல்ல நட்புடன் உள்ளோம். வரும் காலத்திலும் அவர்களுடன் நட்புடன் இருக்க விரும்புகிறோம். அதனால் கூட்டணி அமைத்திருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனிமேல் பள்ளிகளிலும் ஆதார் பதிவு செய்யலாம்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி!