திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் ஏப்.12ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, ஆகிய தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார். எனவே பொதுக்கூட்டம் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பொதுக்கூட்டம் நடைபெறும் பெல் மைதானத்தை நேரில் பார்வையிட்டனர். அதேபோல் ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நடைபெறும் பெல் மைதானம் மற்றும் மாநகர பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்புப் பணிகள் குறித்து மாநகர காவல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு, மாநகர பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 6 மணி முதல் வரும் 13ஆம் தேதி காலை 6 மணி வரை மாநகரப் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாநகர காவல் ஆணையர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவிற்கு ஆதரவளிப்பதாக கராத்தே செல்வின் நாடார் மனைவி அறிவிப்பு! - Lok Sabha Election 2024