திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு பொம்மனம்பட்டி கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வரும் குடிநீர், கலங்கிய நிலையிலும், அதில் தலைபிரட்டை தவளைகளும் இருப்பதாக அப்பகுதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் நோய்தொற்று ஏற்படுவதுடன் ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். மேலும் இப்பிரச்சினை குறித்து பேரூராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அதனை கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இப்பிரச்சினையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு!
இது குறித்து அப்பகுதி குடியிருப்புவாசி ரதிஸ் பாண்டியன் கூறுகையில், “எங்கள் ஊருக்கு வாரத்திற்கு இரண்டு முறை காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வருவது வழக்கம். கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் குழாய் வரும் வழியில் சாலையோரம் உள்ள ஏர்வாழ்வை, தனியார் ரியல் எஸ்டேட் பணிகளுக்காக, பிளாட் போடுவதற்காக அதனை மூடியுள்ளனர்.
இதனால் அந்த இடத்தில் குளம் போல் தேங்கியுள்ள தண்ணீர் மழைநீருடன் கலந்து அதனை குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் கடந்த ஒருவாரமாக கலங்கிய நிலையில் வருவதுடன் தலைபிரட்டை தவளைகளும் வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல் உபாதைகள் மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்