சென்னை: கோயம்பேடு 100 அடி சாலையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தின் மீது, இன்று (ஏப்.13) தண்ணீர் லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கக்கூடிய குடிநீர் லாரி ஒன்று, திருமங்கலத்தில் இருந்து தண்ணீரை ஏற்றிக்கொண்டு வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. இந்த லாரியானது கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தின் மீது செல்ல முயன்றுள்ளது. அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த குடிநீர் லாரி, மேம்பாலத்தின் தொடக்கத்தில் உள்ள தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பின்னர் மேம்பாலத்தின் சுவரில் பொருத்தப்பட்டிருந்த கம்பிகளின் மீது மோதி லாரி சாய்ந்தபடி நின்றது. இந்த விபத்தில் லாரி பலத்த சேதமடைந்ததுடன், அதிலிருந்த தண்ணீர் முழுவதும் சாலையில் வழிந்து, ஒரு சிறிய ஆறு போல ஓடியது. இந்த விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தடுப்பு சுவரில் மோதி நின்ற லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்தினாரா, அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்தால் யாருக்கும் உயிர் சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.