சென்னை: சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் அதிகளவிலான போதைப்பொருள் காத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளின் உடமைகளை அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த அகமது இட்ரீஸ் (வயது 28) என்ற பயணியிடமிருந்து சுமார் மூன்று கிலோ (2,970 கிராம்) எடையுள்ள போதைப் பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். அப்போது அந்தப் பயணி, இது போதைப் பொருள் அல்ல. உடலுக்கு சக்தியை கொடுக்கக்கூடிய, குளுக்கோஸ் வகை பவுடர் என்று வாதிட்டார். இருப்பினும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், சந்தேகத்தில் அதை, பரிசோதனைக்காக ஆய்வு கூடத்துக்கு அனுப்பினர்.
அதில் இது போதைப்பொருள் என்பது தெரியவந்தது. ஆனால் அது மெத்தலட்மினா? அல்லது கொக்கையினா? என்ற குழப்பம் நிலவியது. இதனால் போதைப் பொருள்களின் மொத்த மதிப்பு என்ன என்பதை, மத்திய வருவாய் புலனாய்துறையினர், அறிவிக்காமல் நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில், பரிசோதனை கூடத்தில் இருந்து, இது மிக அதிக வீரியம் கொண்ட கொக்கைன் என்ற தகவல் வெளியானது.
இதை அடுத்து இந்த உயர் ரக கொக்கைன் போதைப் பொருளின் மதிப்பு 27 கோடி ரூபாய் என்று மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்தோனேசிய பயணி அகமது இட்ரீஸை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்து போது, அவர் தாய்லாந்து, எத்தியோப்பியா, துபாய் போன்ற நாடுகளில் இருந்து சுற்றுலா பயணி விசாவில் பலமுறை சென்னை வந்து விட்டு சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது. அவர் சென்னைக்கு பலமுறை வந்த போது, இதே போல் போதைப் பொருளை கடத்திக்கொண்டு வந்திருக்கலாம் என விசாரித்து வருகின்றனர். மேலும் இவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த போதைப்பொருளை யாரிடம் கொடுப்பதற்காக கடத்தி வந்தார், அவரின் பின்னணி என்ன என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் ஒரு வெளிநாட்டுப் பயணியிடம் இருந்து 27 கோடி ரூபாய் மதிப்புடைய, போதை பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வேலைநிறுத்த போராட்டம்: சென்னையில் இருந்து லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள், சரக்கு விமான சேவை ரத்து!