சென்னை: தமிழ்நாட்டில் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வரும் நோயாளிடம் இருந்து மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், "இந்தியாவில் சமீப காலமாக நிபா வைரஸ், சண்டிபுரா வைரஸ், மூளையை உண்ணும் அமீபா உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தற்போது சிகிச்சை அளிக்கும் போது அந்த நோய்கள் மருத்துவ பணியாளர்களுக்கு பரவாமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதன்படி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முன் மருத்துவப் பணியாளர்கள் குறிப்பிடத்தக்க முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக,
- அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்
- கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்
- பிபிஇ கிட் அணிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்
- நோயாளியை பரிசோதிக்கும் பொழுது மருத்துவ பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்
- நோயாளிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை முறையாக கையாள வேண்டும்
- ஊசி போன்ற கூர்மையாக உள்ள உபகரணங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும்
- மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்
- மருத்துவ பணியாளர்கள் அனைவரும் முறையாக ஹெபடைடிஸ் பி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்
ஆகிய வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மருத்துவப் பணியாளர்களும் பின்பற்ற மாவட்ட சுகாதார அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்