சேலம்: ஆட்டையாம் வளவு கிராமத்தில் குடிநீர் தேக்கத் தொட்டியில் இறந்து கிடந்த நாயின் உடலை மீட்ட தாரமங்கலம் காவல்துறையினர், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்து ஆட்டையாம் வளவு என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் 20 அடி உயரத்தில் மிகப்பெரிய நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து, சுற்றுவட்டார அனைத்து கிராமங்களுக்கும், அரசு பள்ளிக் கூடங்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று (பிப்.22) காலை வழக்கம்போல், நீர்த்தேக்கத் தொட்டியின் ஆபரேட்டர் அம்மாசி என்பவர், நீர்த்தேக்கத் தொட்டியின் மேலே ஏறி பார்த்த நிலையில், தொட்டியின் உள்ளே ஒரு குட்டி நாய் இறந்த நிலையில் மிதந்து கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆபரேட்டர், இது குறித்து ஊர்மக்கள் மற்றும் தாரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் காவல்துறையினர், நீர்த்தேக்கத் தொட்டியை பார்வையிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “இறந்த நாயின் உடல் கிடந்த தண்ணீரை, நாங்கள் கடந்த சில நாட்களாக பயன்படுத்தி உள்ளோம் என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. எனவே, குடிநீரில் நாய்க்குட்டியை வீசிச் சென்ற மர்ம நபர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மனைவியை கத்தியால் குத்திய கணவனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை - சென்னை மகிளா நிதிமன்றம் உத்தரவு