திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இப்பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறை (Communication) சார்பில், சமுதாய வானொலி (Mano Community Radio) துவக்க நிகழ்ச்சி நாளை (மார்ச் 8) நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது. இதற்கான அழைப்பிதழும் தயார் செய்யப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகர் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், முன்னாள் துணைவேந்தர்கள் பாஸ்கரன் மற்றும் பிச்சுமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதால், அவரை நிகழ்ச்சிக்கு அழைக்க கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது, பாஸ்கரன் கடந்த 2016 - 2019 காலகட்டத்தில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றியபோது பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக அப்போது அவர் மீது புகார் எழுந்தது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கையில் குற்றம் நிகழ்ந்த இடம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, முதல் தகவல் அறிக்கையில் பல்கலைக்கழகத்தின் பெயர் இடம் பெறும் அளவுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய நபரை, எப்படி சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என சக பேராசிரியர்கள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து மதுரையைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியர் கிருஷ்ணசாமி உள்பட பலர் சமூக வலைத்தளம் மூலமாகவும் எதிர்ப்புகள் தெரிவித்தனர். மேலும், சிலர் உயர் கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பிதாகவும் கூறப்படுகிறது.
இது போன்ற சூழலில், கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தற்போது நாளை நடைபெறவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அறிந்து கொள்வதற்காக பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகரைத் தொடர்பு கொண்டபோது, “நாளை நிகழ்ச்சி நடைபெறுவதாக எனது கவனத்திற்கு எந்த தகவலும் வரவில்லை. என்னிடம் நிகழ்ச்சிக்கான எந்த ஒரு கையெழுத்தும் வாங்கவில்லை. நாளை சிண்டிகேட் மீட்டிங் உள்ளது.
இதனால் நாளை அந்த நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பு இல்லை” என்று பதில் தெரிவித்தார். ஏற்கனவே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக பேராசிரியர்கள் நியமனம் உள்பட பல்வேறு பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இது போன்ற சூழ்நிலையில், ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் துணைவேந்தரை சிறப்பு விருந்தினராக அழைத்த காரணத்தால் வானொலி துவக்க நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழிசை சௌந்தரராஜன் தீடீர் ஆலோசனை.. புதுச்சேரி சிறுமி கொலை விவகாரத்தில் அடுத்தகட்டம்!