சென்னை: நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். அதனைக் கண்டித்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன் பெற்றுள்ளனர். கிராமப்புற மாணவர்களும், ஏழை எளிய குடும்ப மாணவர்களும் அதிகம் பயனடைந்துள்ளனர் என உண்மைக்கு மாறான செய்தியை பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
நீட் தேர்வு வருவதற்கு முன்பும், வந்த பின்பும் அரசுப் பள்ளி மாணவர்கள் எவ்வளவு பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்ற விவரத்தை தமிழ்நாடு அரசு தெரிவிக்க மறுக்கிறது. இது குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால், நீட் தேர்வு வேண்டும் என்பது உறுதியாகிவிடும் என அண்ணாமலை கூறி வருகிறார்.
நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன் பெற்றதாக அவர் கூறுவது தவறு. நீட் வந்த பிறகு , அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 0.1 விழுக்காடு மட்டுமே கிட்டியது. அரசுப் பள்ளி மாணவர் களுக்கான, 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வந்த பிறகுதான் நிலைமை சிறிது சரியானது.
தமிழ்நாடு அரசு நுழைவுத் தேர்வுகள் இல்லாத, தொழிற்கல்வி நிறுவனங்களிலும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு பரிந்துரைத்ததாக பொய்யை அண்ணாமலை கூறுகிறார். ஆனால், உண்மையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்பது தகுதி, திறமையை பாதிக்கும். ,எனவே அதை வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதி மன்றத்தில், ஒன்றிய அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
இதையெல்லாம் தமிழ்நாடு மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டு அண்ணாமலை பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். மாநில உரிமைகளுக்கு எதிராக பேசி வருகிறார். உடனடியாக, தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை, ஒன்றிய அரசு பெற்றுக் கொடுத்திட வேண்டும்.
அக்கோரிக்கையை தமிழக பாஜகவும் வலியுறுத்த வேண்டும். நீட் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிற்கே உள்ளது. ஏனெனில் இத்தேர்வில் வெளிப்படைத் தன்மையே இல்லை. நீட் தேர்வை எழுதும் மாணவர்களின் முழுமையான எந்த விவரங்களையும் ஒன்றிய அரசு வெளியிடுவதில்லை.
எந்த புள்ளிவிவரங்களும் கிடைப்பதில்லை. இதனால் எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ள முடியவில்லை இது வருந்தத்தக்கது. எனவே, கீழ்கண்ட விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுவதுடன், இது வரை நடந்த நீட் தேர்வுகள் குறித்து முழுமையான விவரங்களையும் வெள்ளை அறிக்கையாக ஒன்றிய அரசு வெளியிட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்தார்கள், எத்தனை பேர் எழுதினார்கள், அவர்களின் பெயர், வயது, பாலினம், மாநிலம், ஊர், கிராமப்புறம் அல்லது நகரம் போன்ற விவரங்களை வெளியிட வேண்டும். நீட் தேர்வை எழுதியவர் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளியை சேர்ந்தவரா? மாநிலப் பாடத்திட்டம், சிபிஎஸ்இ அல்லது பிற பாடத்திட்டத்தில் படித்தவரா போன்ற விவரங்களை வெளியிட வேண்டும்.
மேலும், எத்தனை முறை நீட் தேர்வை எழுதியவர், பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவரா, அரசு பயிற்சி மையத்தில் படித்தவரா போன்ற மாணவர்களின் முழுமையான விவரங் களை வெளியிட வேண்டும். நீட் தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண், அனைத்து மாணவர்களின் பொதுவான அகில இந்திய தரவரிசை பட்டியல், வகுப்புவாரி தரவரிசை பட்டியல், மாநில அளவில் பொதுவான தரவரிசை பட்டியல், வகுப்புவாரி தரவரிசை பட்டியல் போன்ற விவரங்களை வெளியிட வேண்டும்.
டிஜிட்டல் இந்தியா, ட்ரான்ஸ்பரென்ட் இந்தியா என்றெல்லாம் பெருமை பட்டுக் கொள்ளும் ஒன்றிய அரசு இந்த விவரங்களை முழுமையாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். நீட் தேர்வு தரவரிசை பட்டியலில், முதல் 25 மாணவர்களின் தரவரிசை (Toppers Rank list) மட்டுமே வெளியிடப்படுகின்றன.
முழுமையான தரவரிசைப் பட்டியல் வெளியிடப் படுவதில்லை. ஒரு மாணவர் தனது தனிப்பட்ட மதிப்பெண்ணை மட்டுமே அறிய முடிகிறது. பிறரின் மதிப்பெண்களை அறிய முடிவதில்லை. வெளிப்படைத் தன்மை இல்லை, இதனால் இத்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிய முடியவில்லை.
எனவே, நீட் தேர்வு தொடர்பான முழுமையான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது" என குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் ஆண்டுக்கு 33 ஆயிரம் பேரின் உயிரை வாங்கும் காற்று மாசு... ஆய்வில் அதிர்ச்சி தகவல்!