விருதுநகர்: சிவகாசி மாநகராட்சி மேயரின் கணவர், தன்னை ஒருமையில் பேசி தரக்குறைவாக நடத்துவதாகவும், இதுவரை தனது வார்டில் எந்த ஒரு பணியும் முழுமையாக நடைபெறவில்லை என்றும், இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்போவதாகவும் திமுக பெண் கவுன்சிலர் மாமன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு வைத்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி சாதாரண கூட்டம் நேற்று (நவ.28) மாமன்ற உறுப்பினர் மேயர் சங்கீதா இன்பம் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அப்போது, மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, பேசிய 6-வது வார்டு திமுக பெண் மாமன்ற உறுப்பினர் ஸ்ரீநிகா, "தனது வார்டில் உள்ள பிரச்சனை குறித்து தகவல் கேட்ட பொழுது, மேயர் சங்கீதாவின் கணவர் இன்பம் தன்னை ஒரு பெண் என்று பாராமல் தரை குறைவாக ஒருமையில் பேசியதாகவும், அதிமுகவிலிருந்து வந்த பெண் கவுன்சிலர் என்பதால் தன்னை மிகவும் கேவலமாக பேசியதாகவும், நான் திமுகவில் இணைந்ததில் இருந்து இதுவரை எந்த அதிமுக நிகழ்ச்சியோ அல்லது கூட்டத்தில் கூட கலந்து கொண்டதே கிடையாது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த நிலையில் என்னை மிகவும் கேவலமாகவும், தரக்குறைவாகவும் பேசியதற்கு மாநகராட்சி ஆணையாளர் பதில் கூற வேண்டும் என்றும், மாநகராட்சி அலுவலகத்திற்குள் மேயரின் கணவர் மேயரின் மகன் என குடும்பமே உட்கார்ந்து கொண்டிருப்பதாகவும்" குற்றம் சாட்டினார்.
மேலும், இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதப்போவதாகவும், இதுவரை தனது வார்டில் எந்த ஒரு பணியும் முழுமையாக நடைபெறவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அப்போது அவருக்கு ஆதரவாக பேசிய ஏராளமான பெண் கவுன்சிலர்கள், இதற்கு ஆணையாளர் உடனடியாக பதில் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: விஜய் கட்சியில் இணைந்த மாரி செல்வராஜின் வாழை பட கதாநாயகன்!
அதேபோல, 21-வது வார்டைச் சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர், "தனது வார்டில் எந்த ஒரு அடிப்படை பிரச்சனைகளும் இந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை என்றும், இதனால் எனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் இருப்பதாகவும்" கூறி மாமன்ற கூட்டத்தில் மேயர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணிகள் முடித்துக் கொடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து 21-வது வார்டு கவுன்சிலர் எழுந்து சென்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்