புதுக்கோட்டை: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக் கூறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டு, தமிழக அரசை கண்டித்தும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் செயல் இழந்துவிட்டது. இது தமிழக அரசு தோல்வி அடைந்ததை எடுத்துக்காட்டுகிறது. சம்பந்தப்பட்ட அந்த அரசு மருத்துவமனையில் நிலவிய மருந்து தட்டுப்பாட்டை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும், #கருணாபுரம் கள்ளச்சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று விடியா முதல்வர் பதவி விலக வலியுறுத்தியும்,#புதுக்கோட்டை மாவட்ட #AIADMK சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…… pic.twitter.com/w3M4NsXS9T
— Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK (@Vijayabaskarofl) June 24, 2024
அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை. இந்த விவகாரத்தில் வீண் விவாதங்களை நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் அரசு ஈடுபட வேண்டும். நாங்கள் சுட்டிக்காட்டிய பிறகு மருந்துகளை கொள்முதல் செய்து தற்போது மருந்து உள்ளது என்று அமைச்சர் கூறி வருகிறார்.
இதையும் படிங்க: தேனி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நடனமாடி அசத்திய பெண்! - வைரலாகும் வீடியோ
இந்த அரசு மெத்தனால் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது. கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு மெத்தனால் எங்கிருந்து வந்தது, யார் மூலம் வந்தது என்பதை விசாரிக்க வேண்டும். இத்தகைய சம்பவத்தில் ஈடுபடக் கூடியவர்களை கைது செய்ய வேண்டும்.
இந்த விவகாரம் தமிழகத்தில் மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால் சிபிசிஐடி விசாரணையை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தனால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக மரக்காணம் விவகாரத்திலும் சிபிசிஐடி விசாரணை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை அதனால் தான் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துகிறோம்.
மேலும், காவல்துறையும் இதில் உடந்தையாக இருந்திருக்கலாம் என்பதால் தான் காவல்துறையின் எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த அரசுக்கு மடியில் கனமில்லை என்றால் அவர்களாகவே முன்வந்து, வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும், அதைத்தான் நீதிமன்றத்திலும் கூறியுள்ளோம். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு திமுக அரசு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விவகாரம்: தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!