சென்னை: சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் திமுகவின் 75வது ஆண்டு பவள விழா, திமுக முப்பெரும் விழா நாளை மாலை நடைபெற உள்ளது. இதையொட்டி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடு பணிகளை திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா. சுப்பிரமணியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், “நாளை மாலை 5 மணிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா மிக சிறப்பான முறையில் ஏற்பாடுகள் மாநில மாநாட்டிற்கு நிகராக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா ஒரு சேராக நடைபெறுவது சிறப்பானது.
இந்த ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முரசொலி பவளவிழா கொண்டாடப்பட்டது. மேலும் தேசிய அளவிலான மகளிர் தலைவர்கள் அடங்கிய மாநாடும் இங்கு நடைபெற்றது. அதேபோல் வரலாற்று சிறப்பு மிக்க மாநாடுகள் இங்கு நடைபெற்றுள்ள நிலையில், தற்போது திமுகவின் பவள விழா முப்பெரும் விழாவும் முதலமைச்சர் தலைமையில் இந்த மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் இந்த நிகழ்வை பார்த்து ரசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது 80,000 இருக்கைகள் வரை அமைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்கள், திமுக ஆதரவாளர்கள் என லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க இருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழக அரசியல், முன்னேற்றத்தில் 75 ஆண்டு கால திமுகவின் பங்கு என்ன?
செஞ்சி கோட்டைக்கு இணையாக கோட்டை வடிவில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 18 இடங்களில் (எல்இடி ஸ்க்ரீன்ஸ்) ஒளி திரைகள் வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 10,000 சதுர அடியில் எல்இடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 170 அடி நீளத்திற்கு கோட்டை வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. பசுமையான வகையில் வரவேற்க 5000 வாழை மரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வாகனம் நிறுத்தங்கள் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. நந்தனம் கலைக் கல்லூரி மைதானம், டீச்சர் காலேஜ் மைதானம் உள்ளிட்ட 11 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறைகள், ஓய்வறைகள் என பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகம் 75 வருடங்களாக கடந்து வந்த சாதனைகள், சோதனைகள் என அனைத்தும் எடுத்துரைக்க 500க்கும் மேற்பட்ட வண்ண பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கப்பட்ட கலைஞர் பதிப்பகத்தின் சார்பில் விற்பனை கூடம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை பவள விழாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் முன்னாள் முதல்வர் கலைஞர் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் வந்து வாழ்த்தி உரையாற்றுவார்” என தெரிவித்தார்.