சென்னை: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதி வெளியிடப்பட்டது. இது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில், 'ஜூன் 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும், ஜூன் 21 வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், திமுகவின் வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதேபோல், மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதேபோல், தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக இதுவரை தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
மேலும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு, விக்கிரவாண்டி தொகுதியில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. ஆனால், கடந்த காலங்களில் இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. இதனால் இந்த தொகுதியில் பாஜக போட்டியிடுமா அல்லது பாஜக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு தங்களது ஆதரவை தெரிவிக்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.