சென்னை: நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளை உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்களவையில் பேசத் தொடங்கிய திமுக உறுப்பினர் பி.வில்சன், சுங்கச்சாவடிகள் ஏன் அகற்றப்பட வேண்டும் என்பதற்கான விளக்கங்களையும் அளித்தார். மேலும், அனைவரும் ஒன்றுபட்டு சுங்கச்சாவடிகளை நீக்குவதற்கான வழிகளைக் காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய எம்பி வில்சன், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை ஒழிப்பது தொடர்பாக மாநிலங்களவையில் நான் எழுப்பிய சிறப்பு கவன ஈர்ப்பு கேள்விக்கு பதிலளிக்கும் போது, அமைச்சருக்கு, உயர் அலுவலர்களால் போதிய ஆலோசனைகள் வழங்கப்படவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது என்றார்.
தொடர்ந்து, அமைச்சரின் எழுத்துப்பூர்வ பதிலில், 1997ஆம் ஆண்டின் முந்தைய தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் அறுபது கிலோமீட்டர் தூரம் குறித்து எந்த அளவுகோலும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
விதிகளை மீறுகிறதா ஒன்றிய அரசு?
இது 1997 விதிகளைக் குறித்த தவறான புரிதலைக் குறிக்கிறது. இந்த விதியானது உண்மையில் இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையில் 80 கி.மீ தூரத்தை குறிப்பிடுகிறது. மேலும், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, 60 கி.மீ சுற்றளவில் சுங்கச்சாவடிகள் அனுமதிக்கப்படாது என்று நாடாளுமன்றத்தில் தவறுதலாக அறிவித்து விட்டார் என்பதை இது குறிக்கிறதா? என வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது பரனூரில் செய்த முதலீட்டை விட ரூ.28.54 கோடி கூடுதல் லாபம் ஈட்டியுள்ளது என்பது உறுதிசெய்யப்பட்ட வகையில், விதிகளின்படி சுங்கக் கட்டணத்தைக் குறைக்கத் தவறிவிட்டது என்பதையும் அமைச்சர் ஒப்புக்கொள்கிறாரா?
அதுமட்டுமின்றி, வசூல் செய்யப்பட்ட அதிகப்படியான நிதியானது இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் டெபாசிட் செய்யப்படுகிறது என்பதும், அது தேசிய நெடுஞ்சாலைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், விரிவாக்குவதற்கும் ஒதுக்கப்படுகிறது என்ற விளக்கமும் மிகவும் கேள்விக்குரியது எனவும் வில்சன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்த நடைமுறையானது சுங்கச்சாவடி கட்டணம் குறித்து நிறுவப்பட்ட சட்டங்களை மீறுவதாகவும், பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகவும், சாலை பயனர்களின் செலவில் ஒரு சிலருக்கு பயனளிப்பதாகவும் தெரிகிறது. மேலும், இந்த முதலீடுகள், செலவுகள் மற்றும் வசூல்களை மறுஆய்வு செய்ய சுயாதீன தணிக்கை ஆணையம் என்று எதுவும் இல்லை என்பது வருத்தமளிப்பதாகவும் கூறினார்.
கட்டண விதிகள் பெரும்பாலும் நெகிழ்வான விதிமுறைகளுடன் ஒப்பந்தக்காரர்களுக்கு சாதகமாக உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் பொது மக்கள் அத்தகைய அநீதியான சட்டத்தின் கீழ் நியாயமற்ற தொகையை செலுத்த நிர்பந்திக்கப்படுகிறார்கள். எனவே, இந்த அநியாயமான சுரண்டலுக்கும், கொள்ளைக்கும் அஞ்சி நாம் நம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் ஒரு நாள் வரலாம். இந்த நியாயமற்ற சுங்கச்சாவடி கட்டணங்களை எதிர்க்கவும், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்றவும் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என எம்பி வில்சன் வலியுறுத்தினார்.
திமுக எம்பி வில்சன் எக்ஸ் பதிவு:
My Special Mention today in Parliament demanding Closure of Toll Plaza’s across the country.
— P. Wilson (@PWilsonDMK) July 29, 2024
******************************************
Right to free movement is a fundamental rightavailable to all. The increasing number of toll plazas and the annual hikes in toll fees are… pic.twitter.com/2xMRil51Ea
தான் மாநிலங்களையில் எழுப்பிய கேள்வி தொடர்பாக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தனது எக்ஸ் தள பதிவில், “சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமை என்பது அனைவருக்கும் கிடைக்கக்கூடிய அடிப்படை உரிமை.
அதிகரித்து வரும் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையும், ஆண்டுதோறும் சுங்கக் கட்டண உயர்வும் தமிழ்நாட்டு மக்கள் உள்பட மொத்த நாட்டு மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றி வருகின்றன.
தற்போது, தமிழ்நாட்டில் 65 சுங்கச்சாவடிகள் உள்ளன. குறைந்தது ஐந்து சுங்கச்சாவடிகள் மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லையிலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள் உள்ளன. மேலும் 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் 60 கி.மீ தூர வரம்பை மீறி அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுங்கச்சாவடியை மூடுவதாக உறுதியளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை 32-இல் உள்ள பரனூர் சுங்கச்சாவடி ஒரு தெளிவான உதாரணம். சி.ஏ.ஜி (CAG) அறிக்கையின்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.28.54 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும், மேலும், 40 விழுக்காடு சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் எனும் விதிகளை பின்பற்றவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கக் கட்டணங்களை ஒழுங்குபடுத்த சுயாதீனமான அமைப்பு என்று எதுவும் இல்லை. மேலும், அவ்வப்போது கட்டணங்களை உயர்த்துவதற்கான சூத்திரம் மிகவும் தன்னிச்சையானது மற்றும் அடிப்படை இல்லாதது என்பதுடன் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் அதிக லாபம் ஈட்ட உதவுகிறது.
இது பொது நலனுக்கு எதிரானது. இது ஏழைகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிப்பதாகும். இந்த சுங்கச்சாவடிகளில் முதலீடுகள் மற்றும் வசூலிக்கப்பட்ட தொகைகளை பகுப்பாய்வு செய்ய ஒரு சுயாதீன அமைப்பைக் கொண்டு தணிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி, வாகனத்தை பதிவு செய்யும் போதே ஒரு முறைக் கட்டணமாக ஒரு சிறிய கட்டணத்தை வசூலிக்கலாம் என்பதை முன்மொழிகிறேன். இது சுதந்திரமான இயக்கத்திற்கான உரிமையை மதிக்கும் நியாயமான மற்றும் வெளிப்படையான அமைப்பை உறுதி செய்யும்.” என்று பதிவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.