சேலம்: 2024 மக்களவை தேர்தலையொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் எம்.பி கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மீட்க 'ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் பெறப்பட்டு, அதனை நாடாளுமன்றத்தில் ஒலித்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக திமுக சார்பில் எம்பி கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று(பிப்.11) திமுக சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், பொதுமக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அவர்களின் கோரிக்கைகளைப் பெற்றனர். இதில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், ஹோட்டல் உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் அவர்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கை.. ராமேஸ்வரத்தில் திமுக போராட்டம்!