சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்துள்ளதாகக் கூறி, திமுக எம்எல்ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்த நோட்டீசுக்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அனுப்பிய பதில் நோட்டீசில், கள்ளச்சாராய மரண சம்பவத்துக்குப் பின் முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கு பதிலளிக்க அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த காழ்ப்புணர்ச்சியுடனும் கருத்துக்களை தெரிவிக்கவில்லை எனவும், நடந்த சம்பவத்தின் அடிப்படையில் தெரிவித்த கருத்துக்களில் எந்த அவதூறும் இல்லை எனவும், சமூகப் பிரச்சினைகளை பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கில் கருத்து தெரிவித்ததாகவும், தமிழக மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக குரல் எழுப்பி வரும் தங்களுக்கு எதிராக அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசை திரும்பப் பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என அந்த பதில் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.