சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இதை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இதற்கிடையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புப்படுத்தி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை பின்னணி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அறிவிக்கப்படாத முதல்வராகவே செயல்பட்டு வந்த வசந்தம் கார்த்திகேயனும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனும் தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வணிகர்களின் பாதுகாவலர்கள் என்று கூறப்படுகிறது என நேற்று ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதே போல, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் உடந்தையாக இருந்ததாக வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உதயசூரியனை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியிருந்தார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஆதாயம் தேடுகிறதா பாமக?: அப்போது பேசிய அவர்கள், "கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அவதூறான குற்றச்சாட்டை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் வைத்து வருகின்றனர். இறந்தவர்கள் வீட்டில் ஆதாயம் தேட நினைக்கும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாற்றம் செய்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் பாமகவை மக்கள் புறக்கணித்ததை மறக்கும் வகையில் அதிமுக ஆட்சியில் பாஜக ஆட்சியிலும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற கள்ளச்சாராயத்தை பற்றி எல்லாம் வாய் திறக்காத ராமதாஸ், தற்போது கள்ளக்குறிச்சி விவாகரத்தை பற்றி பேசி வருகிறார்.
சவால் விடும் எம்.எல்.ஏக்கள்: கள்ளச்சாராய விவகாரத்தில் எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நாங்கள் பொது வாழ்வில் இருந்து வெளியேறுகிறோம். அதே வேலையில் அதை நிரூபிக்க தவறினால் அவர்கள் அரசியல் இருந்து விலகுவார்களா?” என கேள்வி எழுப்பினர். அதனை தொடர்ந்து பேசியவர், "மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பின் போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் யாரும் இறக்கவில்லை மருத்துவரிடம் விசாரித்தபோது நாங்கள் அவர்கள் என்ன சாப்பிட்டு இருக்கிறார்கள் என்று சோதித்த பிறகு தான் எங்களால் சொல்ல முடியும்.
அப்போது இறந்த போது மூவரும் மருத்துவமனைகள் இல்லை அவர்கள் இல்லத்தில் இருந்து தான் இறந்தார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களோட இரண்டு எம்எல்ஏக்களும் நான்கு நாட்களாக அங்கே தான் இருந்தோம். அங்கே இருந்து தேவையான உதவிகளை செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் பல்வேறு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்” என்றார்.
கள்ளச்சாராயம் விற்றவர் திமுக நிர்வாகியா?: பின்னர், கைது செய்யப்பட்ட நபரின் இல்லத்தின் வெளியே உள்ள கதவுகளில் திமுக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், “தேர்தல் நேரத்தில் அனைவரின் இல்லத்தில் உள்ள கதவுகளிலும் திமுகவின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் திமுக நிர்வாகிகள் இல்லை. தேர்தல் நேரத்தில் பனை மரம், தென்னை மரம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் திமுக ஸ்டிக்கர் ஒட்டப்படும். எனவே அதனை தொடர்புபடுத்தி பேச வேண்டாம்” என்றார்.
தொடர்ந்து அவர்கள் பேசுகையில், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயர் சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஏற்கனவே கள்ளச்சாராயம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருப்பது என்பது அவர் அரசியல் ஆதாயத்திற்காக சொல்கிறார். அப்படி என்றால் அவர் உள்ளே சென்றது சிசிடிவிக்கான ஆதாரமும் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா என தெரிவித்தார்.
மேலும், குற்றச்சாட்டு என்பது பொய்யான ஒன்று ஏற்கனவே பாமக நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் ஏறத்தாழ தோல்வி உறுதியாகி இருக்கிறது. வயிற்றெசிச்சலில் பாமக ஆதாயம் தேடுகிறது. எங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு நாங்கள் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளோம்” என தெரிவித்தனர்.