சென்னை: மத்திய அரசால் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இவை பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), பாரதிய சாக்ஷிய அதினியம் (BSA) ஆகிய குற்றவியல் சட்டங்களாகும். இவை ஏற்கனவே இந்திய குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) ஆகியவற்றிற்கு மாற்றாக கொண்டுவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றம் முன்பாக திமுக சட்டத்துறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற வளாகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் திமுக சட்டத்துறை செயலாளரும், எம்பியுமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்திந்த எம்பி இளங்கோ கூறுகையில், “இந்த ஆர்ப்பாட்டம் ஒரு துவக்கம் தான், இந்த மூன்று சட்டங்களும் நாடாளுமன்றத்தில் விவாதமின்றி எதிர்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தபோது நிறைவேற்றம் பெற்றதாகும்.
மேலும், இந்த சட்டங்கள் ஏற்கனவே இருக்கக்கூடிய சட்டங்களாகிய session 300ஐ session 100 ஆக மாற்றி, திரிவுகளை அங்கொன்றும் இங்கொன்றும் மாற்றி வைத்து இயற்றி உள்ளனர். ஆனால் பயனுள்ளதாக ஏதும் இல்லை. இந்த சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை, நீதி பரிபாலனத்திற்கு எதிரானவை. மத்திய அரசு எப்படி அரசியல் அமைப்புக்கு விரோதமாக செயல்படுகிறது என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு உதாரணம்.
இந்த சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயரிட வேண்டும் என்பதை தவிர வேறு நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. சட்டத்தின் தலைப்பும் எந்த மொழியிலும் இருக்கக்கூடாது, ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என்பது நியதி. எனவே, இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக சட்டத்துறை சார்பில் நாளையும் ‘ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில்’ ஈடுபட உள்ளோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கோவை கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் புகார்.. 'டீன்ஸ்' பட ரிலீஸுக்கு பாதிப்பா?