கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர் கணபதியை ஆதரித்து துடியலூர் பகுதியில் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய கனிமொழி, 'கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். சொந்தத் தொகுதியில் நின்றால் விரட்டி விடுவார்கள் என அவருக்கு தெரியும் என அண்ணாமலையை சாடிய அவர், புதிதாக ஒரு தொகுதியை கண்டுபிடித்து இங்க வானதி சீனிவாசனின் ஆதரவால் வெற்றி பெறலாம் என போட்ட கணக்கு தப்பாக போய், கோவையில் வந்து அண்ணாமலை மாட்டிக்கொண்டார் என விமர்சித்தார்.
மருதமலைக்கு திமுகதான் மின்சாரம் தரவில்லை என அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால், 1962-ம் ஆண்டே திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மின்சாரம் கொடுக்கப்பட்டு விட்டது. 20 ஆயிரம் புத்தகங்களைப் படித்திருப்பதாக அண்ணாமலை கூறினாலும், அவர் படித்த புத்தகங்களில் உண்மையில்லை.
தான் கோட்டாவில் வரவில்லை என அண்ணாமலை பெருமை கூறுகிறார். ஆனால், அவரை விட சிறப்பாக செயல்படுபவர்கள், அறிவு உள்ளவர்கள் எல்லாம் கோட்டாவில் வந்து உள்ளார்கள். மேலும் அண்ணாமலை, கருணாநிதி கொடுத்த கோட்டோவில் தான் வந்துள்ளார்' என கனிமொழி தெரிவித்தார். பொய்யான தகவல்களை பரப்புவதற்கு பாஜகவில் ஒரு குழுவை வைத்துள்ளதாகவும், அவர்கள் உண்மை பேச கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சாடினார்.
பாஜக ஆளும் மாநில மக்களின் மனநிலையில், தங்களின் பிள்ளைகளை பாதுகாப்பாக வைப்பதாகவே உள்ளதாவும்; இதனால், மீண்டும் இது ஒரு சுதந்திர போராட்டம் என்பதை நாம் மறக்கக் கூடாது எனவும் பேசினார். 'பாரத் மாதா கி ஜே' எனும் பாஜக ஆட்சியில், பெண்களின் நிலை என மணிப்பூர் விவகாரத்தில் பாலியல் ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்பட்டது, மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும் என போராடியதை சுட்டிக்காட்டினார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் ஜெரிவாலை சிறையில் வைத்துவிட்டு, குற்றத்தில் தொடர்புடையதாக சொல்லப்படும் ரெட்டி என்பவர் பாஜகவுக்கு அதிக தேர்தல் பத்திரம் தந்திருக்கின்றார். இந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை முடிந்துவிடும்.
2 கோடி பேருக்கு வேலை தருவதாக பிரதமர் மோடி சொன்னார் வேலை கேட்டால் 'பக்கோடா போடுங்கள்' என்று சொல்கின்றார். ஜிஎஸ்டி ஃபார்மை சரியாக பில்டப் செய்யவில்லை என்று கூட அதற்கு அபராதம் வைத்து சித்ரவதை செய்யும் ஆட்சி, பாஜக ஆட்சி. பெருமுதலாளிகளின் கடன்களை ரத்து செய்கின்றனர். ரூ.68,700 கோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் ரத்து செய்திருக்கிறார்கள்.
விமான நிலைய விரிவாக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதனை செய்ய மறுக்கின்றார்கள். அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு 10 நாட்களில் ஏர்போர்ட்டை தருகின்றார்கள். அது அம்பானிக்கும் அதானிக்குமான ஆட்சி; சாமானியர்களுக்கான ஆட்சி இல்லை. மோடி ஆட்சிக்கு வந்தபோது, ஒரு சிலிண்டர் விலை ரூ.410. இப்போது சிலிண்டர் விலை ரூ.1000-க்கு மேல் விற்கின்றனர். இந்தியா கூட்டணி டெல்லியில் ஆட்சி அமைக்கும்போது, சிலிண்டர் விலை குறைத்து, ரூ.500-க்கு வழங்கப்படும்.
பெட்ரோல் ரூ.75-க்கும் டீசல் ரூ.65-க்கும் வழங்கப்படும். டோல்கேட் அனைத்திற்கும் ஒரு மூடு விழா நடத்துவோம்; நிச்சயமாக அதனை செய்து காட்டுவோம். தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 10 லட்சம் பெண்கள் கலைஞர் உரிமைத் தொகை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் பெரும்பாலானோர், இந்து பெண்களே என்று கனிமொழி பேசினார்.
முன்னதாக, கோட்டாவின் கீழ், தான் வரவில்லை எனவும், இரண்டு தகரப் பெட்டியுடன் கோவை பொறியியல் கல்லூரிக்கு படிக்க வந்ததாகவும் பாஜக மாநில தலைவரும் கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: என்னை விமர்சிக்கவா உதயநிதிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு? - ஈபிஎஸ் காட்டம் - EPS Slams DMK