தென்காசி: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், தென்காசியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாருக்கு ஆதரவாக திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி நேற்று (செவ்வாய்க்கிழமை) வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய கனிமொழி, "திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாருக்கு கிடைக்கும் வரவேற்பை கண்டாலே தெரிகிறது, அவரது வெற்றி உறுதி என்று. இத்தேர்தல் உண்மைக்கும் பொய்க்குமான தேர்தல். பாஜக அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாது. அப்படிப்பட்ட பாஜகவுடன் சிலர் கூட்டணி வைத்து ஏமாந்து வருகிறார்கள். அப்படி ஏமாறுபவர்களை நம்பி, நாம் ஒட்டுப் போட்டால் நமது ஒட்டு வீணாகும்.
கடந்த தேர்தலின்போது பிரதமர், வெளிநாட்டில் இருக்கக்கூடிய கருப்புப் பணத்தைக் கொண்டு வந்து அனைவருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக கூறினார். கருப்புப் பணமும் வரவில்லை; ரூ.15 லட்சமும் வரவில்லை. மக்களைக் கோமாளி கூட்டமாக நினைக்கும் ஆட்சி இது; மக்களைப் பற்றி எதுவும் யோசிக்கது.
விவசாயிகளுக்கு ஒன்றும் செய்யாத மோடி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.68 ஆயிரம் கோடிக்கு மேல் தள்ளுபடி செய்துள்ளார். ஏனென்றால், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாம் அடுத்த வேளை சாப்பாட்டுக்கூட கஷ்டப்படுகிறார்கள். அதனால், அவர்களது கடனை ரத்து செய்துள்ளார். விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுபான்மையின மக்கள் உள்ளிட்டோர்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களைப் பாஜக கொண்டு வந்த நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்தது, அதிமுகதான்.
ஸ்டிக்கர் ஒட்டும் பாஜக - அதிமுக: ஆனால், இன்று பாஜக - அதிமுக இடையே ஒன்றுமில்லை எனத் தேர்தல் நாடகம் நடத்துகிறார்கள். இதை நம்பாதீர்கள்; ஏனென்றால், அதிமுக, மோடி அரசு ஆகிய இரண்டுமே 'ஸ்டிக்கர்'. அதிமுக ஸ்டிக்கர் ஒட்டியே பழகியவர்கள், எதையும் ஸ்டிக்கர் ஒட்டாமல் தரமாட்டார்கள். அதேபோல, பாஜக பெரிய ஸ்டிக்கர்.
தமிழ் மீது ஆசை கொண்ட மோடி? தேர்தலுக்கு பிறகு எங்களின் தமிழ் ஆசிரியரிடம் பாடம் படியுங்கள்: சாதாரண மக்களை வஞ்சிக்கும் ஒரு அரசு, பாஜக. தமிழக மக்களின் பல்வேறு கஷ்டங்களை கண்டு கொள்ளாதா மோடி, தற்போது திடீர் பாசம் வந்தது போல், தேர்தல் வந்துவிட்டதால் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். அதிலும், அவருக்குத் தமிழ் படிக்க வேண்டும் என திடீர் ஆசை வேறு. தமிழ் நீங்கள் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் தேர்தலுக்குப் பிறகு நீங்கள் சும்மா இருக்கப் போகிறீர்கள். நிச்சயம் வேலை எதுவும் இருக்காது; அப்போது தமிழகத்திலிருந்து நல்ல ஆசிரியர்களை நாங்களே அனுப்பி வைக்கிறோம்.
அண்ணாமலைக்கு கோவைக்கு பதில் கர்நாடகாவில் சீட்: ஆனால், நிச்சயம் அண்ணாமலை சொல்லித்தர முடியாது. ஏனென்றால் அவர் கர்நாடகாவிலிருந்த போது அது வேறவாய், வேறபேச்சு. நான் 'கன்னடக்காரன்', என்னைத் 'தமிழன்' என்று சொல்லாதீர்கள். தமிழன் என்று சொல்வதில் எனக்கு விருப்பமில்லை என்றார். ஏன் அவரை தமிழ்நாட்டில் கொண்டு வந்து தலைவராக சீட்டுக் கொடுத்துள்ளார்கள் எனத் தெரியவில்லை. பெங்களூரு, மைசூரு பக்கம் எங்காவது வைத்திருந்திருக்கலாம்.
இந்தியா கூட்டணி ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை ரூ.75: மேலும், கடந்த 10 வருடம் ஆட்சியிலிருந்த போது, கச்சத்தீவைப் பற்றி பேசாதவர்கள் (katchatheevu issue), தற்போது கச்சத்தீவைப் பற்றி பல்வேறு பொய்களைக் கூறி அரசியல் செய்கின்றனர். அனைத்து மதத்தவரையும் ஒரே தளத்தில் வைத்துப் பார்க்கக் கூடியவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இந்தியா கூட்டணி ஆட்சி மத்தியில் வரும்போது, கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாகவும், பெட்ரோல் விலை ரூ.75 ஆகவும் குறைக்கப்படும். மேலும், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகள் மூடப்படும்.
கனிமொழியின் முக்கிய வாக்குறுதிகள்: தற்போது, தமிழ்நாட்டில் உள்ள காலை உணவுத் திட்டத்தைப் போல், கனடா நாட்டில் 'காலை உணவுத் திட்டம்' கொண்டு வரப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அனைத்து அரசிற்கும் முன்னுதாரணமாக உள்ளது நமது 'திராவிட மாடல்' ஆட்சி. தேர்தல் முடிந்தவுடன் இங்கு புதிய பேருந்து நிலையம், ரூ.3 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம், ரூ.107 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், தென்காசி மக்கள் பயன்படும் வகையில், ஒரு தொழிற்சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தார்.