கோயம்புத்தூர்: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 83வது வார்டு காட்டூர், 70வது வார்டு தெப்பக்குளம் மைதானம் மற்றும் 68வது வார்டு சிவானந்தா காலனி ஆகிய மூன்று பகுதிகளில், இலவச குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, அப்பகுதி மக்களுக்கு 24 மணி நேரம் விநியோகம் செய்யப்படும் ஏ.டி.எம் குடிநீர் இயந்திரத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கூடிய எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாட்டர் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும். தற்பொழுது வரை கோவை தெற்கு தொகுதியில் 9 குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஒவ்வொரு குடும்பமும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அவர்கள் எலக்ட்ரானிக் கார்டு மூலம் எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் அங்கன்வாடி மையங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நேற்று ஒரே நாளில் 3 அங்கன்வாடி மையங்கள் திறந்து வைத்து உள்ளோம். மேலும், 3 அங்கன்வாடி மையங்களின் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் மற்ற அரசியல் கட்சிகள் களத்திற்கு வரும் முன்பாக, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளை 195 இடங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே துவக்கி விட்டோம்.
தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் வேகம் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் தேர்தல் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, தேர்தல் பணிக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, முழு வீச்சில் தேர்தலைச் சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராகி வருகிறது.
நிச்சயமாக இந்த முறை தமிழகத்திலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிகளை குவிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இப்பொழுது இருக்கின்ற தேர்தலில், முக்கியமான கேள்வி என்பது யார் இந்த நாட்டினுடைய அடுத்த பிரதமர் என்பதுதான்.
கடந்த பத்தாண்டுகளாக நாட்டை உயர்த்திக் கொண்டு, முன்னேற்றிக் கொண்டு உள்ள பிரதமர் மோடி மூன்றாவது முறை பிரதமர் ஆக வேண்டும் என்பதுதான் இந்த தேர்தல். அதனால் தமிழகத்தினுடைய தேர்தல் களத்திலே நாங்கள் வைப்பது ஒரே ஒரு கேள்வி தான். இந்த நாட்டினுடைய பிரதமராக யார் வர வேண்டும், அதற்கு வாக்களியுங்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கின்ற பிரதமருக்கு சரிசமமாக ஒரு வேட்பாளர் கூட இந்த நாட்டிலே கிடையாது.
அப்படி இருக்கின்ற சூழலில், தமிழகம் தேசியத்தின் பக்கம் திரும்புவதற்கான ஒரு நல்ல சூழல் உருவாகிக் கொண்டு உள்ளது. இந்தத் தேர்தலில் எங்களுடைய பணிகளும் பல மடங்கு அதிகரிக்கும். ஏனென்றால், கட்சியினுடைய உறுப்பினர்களின் செயல்பாடுகளும் அதிகரித்து உள்ளது. நிச்சயமாக பிரதமருடைய வெற்றியை அவரிடம் கொடுக்க வேண்டும் என்பதில் ஆவலாக காத்துக் கொண்டு இருக்கிறோம்.
கூட்டணி பேச்சுவார்த்தையை பொறுத்தவரை, இந்தியா முழுவதும் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்கின்ற வரையிலும் கூட்டணிக்கு வந்து கொண்டிருப்பார்கள். இதற்கு முன்பும் அதனை பார்த்துள்ளோம். இன்று வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பல கட்சிகள் வந்து கொண்டிருக்கிறது.
திமுக இதுவரைக்கும் இருக்கின்ற கூட்டணிகளுக்கு இடம் கொடுப்பதற்கு இழுபறியாக உள்ளது. குழந்தைகளை கெடுக்கக்கூடிய போதைப்பொருள்களின் நடமாட்டத்தை ஆளுங்கட்சியின் ஆதரவோடு இருக்கும் நபர்கள் செய்வது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. திமுக தமிழகத்திற்கு ஒரு சாபக்கேடான ஆட்சியை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அதை பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. பா.ஜ.க இளைஞரணி சார்பாக, கோவையில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கு முன்பாக போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை வரும் திங்கள் முதல் ஆரம்பிக்க உள்ளோம்" என தெரிவித்தார்.
மேலும், எம்.எல்.ஏ வானதி சீனிவாசனிடம், நீங்கள் நலமா? என்ற திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘முதலமைச்சரின் குடும்பம் மட்டுமே நலமாக உள்ளது. அதை தாண்டி தமிழ்நாட்டில் ஒருவர் கூட நலமாக இல்லை’ என்றார்.
இதையும் படிங்க: "குடிகார பொறுக்கிகள்" - மஞ்சும்மல் மட்டுமல்ல மலையாள கரையோரத்தையே விமர்சிக்கும் ஜெயமோகன்