சென்னை: சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜகவின் மாநில சிறப்பு செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 6) நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
அத்துடன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன், சரத்குமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “கரோனாவிற்கு பிறகு பல நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்திய மக்கள் மீண்டும் மோடியை 3வது முறையாக பிரதமராகத் தேர்வு செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "சென்னையில் நேற்று ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு பாஜக பெண் நிர்வாகியின் கணவரை கூலிப்படை வெட்டியதில் அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
சாதாரண மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. வன்முறை நிறைந்த மாநிலமாக தமிழகத்தை இதற்கு முன்பு எப்போதும் பார்த்ததில்லை. கடந்த மூன்று ஆண்டு காலமாக திமுக ஆட்சி இந்த அளவிற்கு தமிழகத்தை மாற்றியுள்ளது" என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், "நேற்று முன்தினம் திருவெண்ணைநல்லூரில் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர கள்ளக்குறிச்சியில் 65 பேர் கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்துள்ளனர். 23 பேர் முழுவதுமாக தங்களது பார்வையை இழத்துள்ளனர்" என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பல்வேறு அமைப்பினர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்கள் என அனைவருடனும் தமிழ்நாடு பாஜக ஆறுதலாகத் துணை நிற்கிறோம்.
நம் சமூகத்தில், வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை. ஆனால் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதலமைச்சராக தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, மு.க.ஸ்டாலின் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும்" என தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.